Abstract:
ஒரு மனிதனின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்புவதில் திருப்தியான தொழில் பிரதான இடத்தைப்
பெற்றுள்ளது. ஏறாவூர் பிரதேசத்தில் காணப்படுகின்ற மஸ்ஜித்களில் கடமையாற்றும்
முஅத்தின்களின் வாழ்வாதார நிலையையும் தொழில் திருப்தியையும் மதிப்பிடுதல் இவ் ஆய்வின்
பிரதான நோக்கமாகும். பண்பு ரீதியில் அமைந்த இவ்வாய்வு 30 முஅத்தின்களிடம் நேர்காணல்
மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் இலங்கை
மத்திய வங்கியின் அறிக்கைகளும் இதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஏறாவூர் மஸ்ஜிதுகளில்
கடமையாற்றும் முஅத்தின்களில் அதிகமானவர்கள் வயோதிபர்களாகவும், கல்வித் தகைமை
குறைந்தவர்களாகவும் ஏதோ ஓர் அமைப்பில் அல்குர்ஆனுடன் தொடர்புடையவர்கள்களாகவும்
காணப்படுகிறார்கள். அவர்களுள் அதிகமானவர்கள் மஸ்ஜிதுக்காக அதிக நேரத்தை
செலவிடுபவர்களாகவும், ஒப்பிட்டு ரீதியில் சேவைக் காலம் கூடியவர்களாகவும் இருப்பதோடு
விடுமுறை இன்றியே அவர்கள் கடமையாற்றுகிறார்கள். இம்மஸ்ஜிதுகளில்
கடமையாற்றுபவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த சம்பளம் இலங்கையின் தனி நபர் வருமான
மட்டத்தை அடையவில்லை என்பதோடு, தொழில் திருப்தி இன்றி இறை திருப்திக்காக வேலை
செய்பவர்கள் அவர்களுள் அதிகமானவர்களாவர். தௌஹீத் அமைப்பு சார்ந்த பள்ளிவாயில்களில்
மாத்திரம் முஅத்தினாருக்குரிய தங்கும் வசதிகள் மற்றும் அறையின் உள்ளார்ந்த வசதிகள்
செய்யப்பட்டுள்ளதை கண்டு கொள்ள முடிந்தது. சம்பளம் குறைவினால் அவர்களது பெண்
பிள்ளைகளின் திருமண வயதும் அதிகரித்திருப்பதோடு, வீடு இன்மையால் விவாகரத்தும்
இடம்பெற்றுள்ளது. எனவே, முஅத்தின்மார்களின் சம்பளத்தை அதிகரித்து, அவர்களின்
வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான முன்னெடுப்புக்கள், அதற்கான வழிகாட்டல்கள் பற்றிய
முன்மொழிவுகளைத் தருவதாகவும், எதிர்காலத்தில் இவ்விடயத்தில் ஆய்வை மேற்கொள்வோருக்கு
உதவுவதாகவும் இவ்வாய்வு அமைகிறது.