Abstract:
சமூகம்சார் பிரச்சினைகளுக்குத் தர்க்க ரீதியான தீர்வுகளை முன்வைக்கும் இயலுமைகளை
ஆய்வுகள் கொண்டுள்ளன. முறைமையைப் பேணி மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் சமூகத்தில் மிகச்
சிறந்த தாக்கங்களை ஏற்படத்தக்கூடியவையாகும் என்றவகையில் அறபு மற்றும் இஸ்லாமியத்
துறைகளில் ஆய்வு முயற்சிகளை மேற்கொள்ள துணைபுரியும் இஸ்லாமிய கற்கைகள், அறபு
மொழிப் பீட சர்வதேச ஆய்வரங்குகள் பற்றிய மதிப்பாட்டாய்வொன்றை இந்த ஆய்வு
அடையாளப்படுத்தி நிற்கின்றது. 2014 – 2018ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதிக்குள்
நடாத்தப்பட்ட ஐந்து சர்வதேச ஆய்வரங்குகளின் அடைவுகளை பல்கோணத்தில் நின்று
முன்வைப்பது இவ்வாய்வின் பிரதான நோக்கமாக அமைந்துள்ளது. ஒவ்வொரு வருடமும்
ஆய்வரங்குகளை செயற்படுத்திய பொறுப்பாளர்கள், விரிவுரையாளர்கள், பட்டதாரிகள், இளங்கலை
மாணவர்களுடனான கலந்துரையாடல்கள் மற்றும் அவதானம் ஆகியவற்றைக் கொண்ட
முதல்நிலைத் தரவுகளும், Proceedings and The Book of Abstracts ஆகியவற்றை கொண்ட
இரண்டாம் நிலைத்தரவுகளும் இவ்வாய்வில் உள்வாங்கப்பட்டுள்ளன. இவை விபரிப்பு முறையியல்
(Descriptive Methodology) மூலம் கலந்துரையாடப்பட்டுள்ளன. இரண்டாம் நிலைத்தரவுகளில்
இருந்து பெறப்பட்ட அளவுகள் MS Excel மென்பொருள் மூலம் பகுப்பாய்வு செய்யப்பட்டன.
இப்பீடத்தினால் வருடாந்தம் நடாத்தப்பட்ட சர்வதேச ஆய்வரங்குகள் கடந்த ஐந்து வருட
காலப்பகுதிக்குள் ஆய்வுக் கலாசாரத்தை பல்கலைக்கழக, சமூக, தேசிய, சர்வதேச ரீதியில்
உருவாக்குவதில் சிறந்த அடைவை பெற்றிருக்கின்றது என்பது ஆய்வின் முடிவாக
பிரஸ்தாபிக்கப்படுகின்றது. இறுதியாக, எதிர்வரும் வருடங்களில் நடாத்தப்படவுள்ள சர்வதேச
ஆய்வரங்குகளிற்கான சில பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.