Abstract:
குடியியற் கல்விப் பாடத்தின் பிரதானமான நோக்கம் ஜனநாயக சமூகமொன்றில் வாழும் ஒரு
குடிமகனை உருவாக்குவதாகும். அந்த வகையில் இந்த ஆய்வு இடை நிலைக் கலைத்திட்டத்தில்
2007ஆம் ஆண்டு முதல் உள்வாங்கப்பட்டுள்ள குடியியற் கல்விப் பாடத்தில் ஜனநாயக
எண்ணக்கருவின் உள்ளீர்ப்புக் குறித்து ஆய்வு செய்கின்றது. அதற்காக, இந்த ஆய்வு
ஜனநாயகத்தின் பிரதான பண்புக் கூறுகளை வரையறை செய்து, அவை தேசியக் கல்விக்
கொள்கையில், தரம் 06-11 வரையான குடியியற் கல்விப் பாடக் குறிக்கோள்கள் மற்றும் பாட
உள்ளடக்கத்தில் உள்வாங்கப்பட்டுள்ளதா என்பது குறித்து உள்ளடக்கப் பகுப்பாய்வை
மேற்கொள்கின்றது. இந்த ஆய்வு பண்புசார் அணுகுமுறையில் ஓர் உள்ளடக்கப் பகுப்பாய்வாக
அமையப் பெற்றுள்ளது. இதற்காக நிகழ்தகவற்ற மாதிரியமைப்பில் தரம் 6-11 வரையான குடியியற்
கல்வி பாடப் புத்தகங்களின் பிரதான, கிளைத் தலைப்புக்கள் மற்றும் பிரதான அட்டவணைகள்
என்பன நோக்கமாதிரிகளாக ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. இதனை உறுதிப்படுத்தும் வகையில்
தேசியக் கல்விக் குறிக்கோள்கள் மற்றும் தரம் 6-11 வரையான குடியியற் கல்வி பாடத்தின்
குறிக்கோள்கள் என்பனவும் ஆய்வுக்கெடுத்துக் கொள்ளப்பட்டன. இதற்காக பண்புச் சுட்டி
அட்டவணைகள் இரண்டும் பகுப்பாய்வு அட்டவணைகள் மூன்றும் தயாரிக்கப்பட்டு
பயன்படுத்தப்பட்டன. கண்டடைவுகள் Excel Sheet ஐ பயன்படுத்தி விவரண புள்ளியியல்
நுட்பத்தினடிப்படையில் பகுப்பாய்வுக்குட்படுத்தப்பட்டது. இதனடியாக குடியியற் கல்விப் பாடம் அதன்
உள்ளடக்கத்தில் 70% ஜனநாயக எண்ணக்கருவை கொண்டமைந்துள்ளதாகக் காண்பிக்கிறது.
பாடசாலை சமூகத்திலும் பொதுச் சமூகத்திலும் ஜனநாயகப் பண்பை வளர்ப்பதில்
கலைத்திட்டமல்லாத ஏனைய கற்றல் கற்பித்தல் காரணிகளான ஆசிரியர் நியமனம், பயிற்சி,
கற்பித்தல் முறை, பாடத்திற்கான முக்கியத்துவம் என்பன செல்வாக்குச் செலுத்தியிருக்கலாம்
என்பதனை ஆய்வு அடையாளப்படுத்துவதுடன் குடியியற் கல்விப் பாடத்தை தரம் 10, 11களில்
பிரதான பாடமாக மாற்ற வேண்டும் என்ற பரிந்துரையையும் பிரதானமாக முன்வைக்கின்றது.