Abstract:
பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகும் மாணவர்கள் தமது விருப்பத்திற்குரிய பாடங்களை தெரிவு
செய்வதில் பல்வேறு காரணிகளினை கருத்தில் கொள்வது வழமையாகும். குறிப்பாக தமது சமூக
பண்பாட்டு நியமங்களினை கருத்திற் கொண்டும் பாடத்தெரிவுகளினை மேற்கொள்கின்றனர்.அந்த
வகையில் சமூகவியல் கற்கை என்பது பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகும் மாணவர்களுக்கு ஒரு
புதிய கற்கைநெறியாகக் காணப்படுகின்றது. அத்துடன் இப்பாடநெறியானது ஏனைய
பாடநெறிகளினை விட ஆய்வுகளில் அதிக கவனம் செலுத்துவதுடன் சமூகத்துடன் அதிக
பிணைப்பினையும் கொண்டுள்ளது.எனவே ஏனைய கலைத்துறைசார் பாடத்தெரிவுகளினை விட
இப்பாடத்தெரிவின்போது மாணவர்கள் தமது சமூக மற்றும் பண்பாட்டு நியமங்களினை
முக்கியமாகக் கருத்திற் கொள்கின்றனர். அந்த வகையில் பல்பண்பாட்டு அம்சங்களினை கொண்ட
இலங்கையில் வாழும் இஸ்லாமிய மாணவர்களின் சமூகவியல் பாடத்தெரிவில் செல்வாக்குச்
செலுத்தும் தனியாள், சமூக மற்றும் பண்பாட்டுக் காரணிகளினை இனங்காணும் நோக்கோடு இவ்
ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆய்வானது யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சமூகவியல்
துறையின் முதலாம் வருடம் தொடக்கம் நான்காம் வருடம் வரை கற்கும் மாணவர்களினை
மையமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இங்கு சமூகவியல் துறையில் கற்கும்
மாணவர்களின் மொத்த எண்ணிக்கை (2019) 39 ஆகும். இதில் நோக்கத்திற்குரிய மாதிரியெடுப்பின்
மூலமாக 15 மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதல்நிலைத்
தரவாக விடய ஆய்வு பயன்படுத்தப்பட்டுள்ளதுடன். இரண்டாம் நிலை தரவுகளாக சமூகவியல்
துறை புள்ளிவிபரங்கள் மற்றும் ஏனைய ஆய்வுகள் என்பன பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆய்வின்
பெறுபேறுகளாக சமூகவியல் கற்கையினை தெரிவுசெய்துள்ள இஸ்லாம் சமய மாணவர்கள்
பின்வரும் விடயங்களினை கருத்திற்கொண்டுள்ளமையினை அறிய முடிந்துள்ளது.சமூகவியல்
பாடமானது சமூகம்சார் அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்குவதனால் இஸ்லாமிய மாணவர்கள்
இப்பாடத்தினைத் தெரிவு செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். அத்துடன் சமூகத்தில் தமது
குடும்பத்தின் பொருளாதார நிலைமை, தனிநபர் ஆளுமை, பல்கலைக்கழகச் சூழலில் சிரேஷ்ட
மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களுடனான இடைவினைகள், தொழிலுக்கான வாய்ப்புக்கள்
மற்றும் இஸ்லாமிய சமூகத்தினால் பேணப்படும் பண்பாட்டு நியமங்கள் என்பவற்றினைக் கருத்தில்
கொண்டே சமூகவியல் கற்கையினைத் தெரிவுசெய்து கற்று வருகின்றனர்.