Abstract:
மனித சமுதாயத்தில் இன்றியமையாத எண்ணக்கருக்களில் ஒன்றாக வன்முறை காணப்படுகின்றது. உலகளாவிய
ரீதியில் தற்காலத்தில் பல்வேறு வடிவங்களில் எல்லா சமூகத்திலும் பரவலாக பேசப்படுகின்ற ஒரு சொல்லாக
வன்முறை காணப்படுகிறது. அந்த அடிப்படையில் இலங்கையின் தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தின் கீழும்
சிறுபான்மை முஸ்லிம்கள் பல்வேறு அடக்குமுறைகளுக்கும் வன்முறைகளுக்கும் உட்பட்டு வருகின்றனர்.
அதனடிப்படையில் அண்மையில் இடம்பெற்ற திகன கலவரத்தை மையமாகக் கொண்டு தொடர்ச்சியாக இந்த
நாட்டில் சிறுபான்மையினர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற வன்முறைகள் தொடர்பான பல்வேறு
விடயங்கள் இவ் ஆய்வின் ஊடாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாய்வின் நோக்கங்களைப் பொறுத்த வரை
இலங்கையின் தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக திகன
கலவரமானது மேற்கொள்ளப்பட்டமைக்கான காரணிகளைக் கண்டறிதல், திகன கலவரத்தினை எதிர்கொள்வதில்
முஸ்லிம் அரசியல் தலைமைகளின் பங்களிப்புக்களை கண்டறிதல், திகன கலவரத்திற்கு பின்னர் சிறுபான்மை
முஸ்லிம்களின் பிரச்சினைகளை தீரப்பதற்காக அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படுகின்ற நடவடிக்கைகளைக்
கண்டறிதல் மற்றும் தற்போது சிங்கள முஸ்லிம் உறவு நிலை திகனப் பகுதியில் எவ்வாறு காணப்படுகின்றது
என்பதன் தெளிவினைப் பெறல் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு இவ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இவ் ஆய்வினை மெற்கொள்ள முதலாம் நிலைத்தரவுகளாக நேர்காணல், நேரடி அவதானிப்பு மற்றும்
வினாக்கொத்து போன்றனவும் இரண்டாம் நிலைத்தரவுகளாக குண்டசாலை மற்றும் தெல்தெனிய பிரதேச
செயலக தரவுகள், வன்முறை தொடர்பான புத்தகங்கள், பத்திரிகைகள், சஞ்சிகைகள் மற்றும் முன்னைய
ஆய்வுக்கட்டுரைகள் போன்றவற்றின் ஊடாக தகவல் சேகரிக்கப்பட்டு இத்தரவுகள் அனைத்தும் பண்புசார், அளவு
சார் ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு Ms-Excel Package போன்ற மென்பொருள் பயன்படுத்தப்பட்டன. இந்த
ஆய்வின் முடிவின் படி 67% மக்கள் திகனக் கலவரத்திற்கான பிரதான காரணமாக முஸ்லிம்களின்
பொருளாதாரத்தினை மையமாகக் கொண்டு மெற்கொள்ளப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றனர். மேலும் 53%
மக்கள் கலவரத்தின் போது அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மீது அதிருப்தியுற்றவர்களாக காணப்படுகின்றனர்.
மேலும் 35% மக்கள் தற்போது திகன பகுதிகளில் சிங்கள – முஸ்லிம் உறவுநிலையானது ஓரளவு
திருப்தியானதாக காணப்படுவதாகக் குறிப்பிடுகின்றனர்.