Abstract:
தளம்பலடைந்து வரும் எண்ணெய் விலையானது உலக பொருளாதாரத்துக்கு ஒரு சவாலாக இருந்து வருகின்றது.
இலங்கையும் மசகு எண்ணெய் விலை உயர்வின் தாக்கத்தை எதிர்நோக்கி வரும் ஒரு அபிவிருத்தியடைந்து வரும்
எண்ணெய் இறக்குமதி நாடாகும். இதனால் தொடர்ச்சியாக அதிகரிக்கும் எண்ணெய் விலையானது இலங்கையின்
பேரினப் பொருளாதார மாறிகளில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றதா என்பது ஆராயப்பட வேண்டியதாகும்.
அந்தவகையில் மசகு எண்ணெய் விலை மாற்றத்திற்கும் இலங்கையின் முக்கிய பேரினப் பொருளாதாரக்
குறிகாட்டிகளுக்கும் இடையிலான நீண்டகாலத் தொடர்பை கண்டறிதல் இவ்வாய்வின் பிரதான நோக்கமாகும். மொத்த
உள்நாட்டு உற்பத்தி (GDP), வெளிநாட்டு நேரடி முதலீடு (FDI), பணவீக்கம் (INF), நாணய மாற்றுவீதம் (EXCH)
மற்றும் எண்ணெய் விலை (OILP) ஆகிய மாறிகளை அடிப்படையாகக் கொண்ட இவ்வாய்வில் 1977-2018 வரையான
வருடாந்த காலத்தொடர் தரவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மாறிகளின் நீண்டகாலத் தொடர்பினை மதிப்பிடுவதற்கு
Engle-Granger கூட்டு ஒருங்கிணைவு சோதனையும் மாறிகளுக்கு இடையிலான குறுங்காலத் தொடர்பினையும்
நீண்டகாலச் சமனிலையினையும் அறிந்துகொள்வதற்கு வழுச்சரிப்படுத்தல் மாதிரியுரு சோதனையும்
உபயோகிக்கப்பட்டுள்ளன. Engle Granger கூட்டு ஒருங்கிணைவு சோதனை மூலமாக பெற்ற முடிவுகளின்படி GDP
இற்கும் OILP இற்கும் இடையே நீண்ட காலத்தில் பொருளுள்ள வகையில் நேர்க்கணியத் தொடர்பு
காணப்படுவதுடன் OILP இற்கும் INF இற்கும் இடையில் நீண்ட காலத்தில் பொருளுள்ள வகையில் நேர்க்கணியத்
தொடர்பும் காணப்படுகின்றது. வழுச்சரிப்படுத்தல் பெறுபேறுகளை நோக்கும் போது குறுங்காலத்தில் GDP இற்கும்
FDI இற்கும் மற்றும் GDP இற்கும் OILP இற்கும் இடையே நேர்க்கணியத் தொடர்பும் நீண்ட காலச் சமனிலையும்
காணப்படுகின்றது. அத்துடன் INF இற்கும் FDI இற்கும் மற்றும் INF இற்கும் OILP இற்கும் இடையே நீண்ட காலச்
சமனிலை காணப்படுகின்றது. எண்ணெய் விலையானது தற்காலிக தளம்பல்களில் இருந்து விலகி தொடர்ந்தும்
அதிகரித்துக் கொண்டு வரும் போக்கினையே இன்றைய உலக சந்தையில் காணக்கூடியதாகவுள்ளது. இவ்வாறு
தொடர்ந்தும் எண்ணெய் விலை அதிகரிப்பது எண்ணெய்க்கான கேள்வி அதிகரிப்புடன் பாதகமான பொருளாதார
விளைவுகளை ஏற்படுத்தும். எனவே நீண்ட கால நோக்கில் வலுப்பாதுகாப்பை உறுதிப்படுத்த எண்ணெய் அகழ்வு
சிறந்த முயற்சியாகும். அத்துடன் மசகு எண்ணெயினை பிரதான மூலப்பொருளாகப் பயன்படுத்தும் உற்பத்திகளில்
மாற்று மூலவளங்களைப் பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலமும்
பொருத்தமான விலைச்சீர்திருத்த நடவடிக்கைகளை தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்துவதும் முறையான மானிய
நடவடிக்கைகளைப் பேணுவதும் சர்வதேச எண்ணெய் விலை அதிகரிப்பின் பொருளாதாரத் தாக்கங்களைக்
குறைவடையச் செய்யும்.