Abstract:
இன்றைய உலகில் மனிதனுடைய தேவைகளை நிறைவு செய்வதற்கு பலதுறைகள் காணப்படுகின்ற போதிலும்
மனித தேவைகளை நிறைவேற்றுவதில் விவசாயமானது முக்கியமாக காணப்படுகின்றது. யாழ்ப்பாண
மாவட்டத்தினை பொறுத்த வரையில் விவசாயம் பாரம்பரியமான ஒரு முறையாகக் காணப்படுகின்றதுடன்
பொருளாதாரம் ஈட்டித்தரும் ஒரு துறையாகக் காணப்படுகின்றது. யாழ்ப்பாண மாவட்ட புகையிலை உற்பத்தி
பொருட்களுக்கான கேள்வி தென்பகுதிகளில் உயர்வாகக் காணப்படுகின்றமை உற்பத்தியை அதிகரிக்க
வழிவகுக்கின்றது. வடமாராட்சியை பொறுத்த வரையில் புகையிலைச்செய்கையானது தரமானதாகவும் கற்ற
விவசாயிகளை கொண்டதாகவும் இவர்கள் முழுநேர விவசாயிகளாகவும் 38% மானவர்களும், பகுதிநேர
விவசாயிகளாக 13% மானவர்களும் காணப்படுகின்றனர். இங்கு புகையிலைச்செய்கையானது
சிறுபோகச்செய்கையாக 2018 இல் மேற்கொள்ளப்பட்டது. இப்பிரதேச மக்களினுடைய ஜீவனோபாயத் தொழிலாக
விவசாயம் காணப்படுகின்றது. குறித்த ஆய்வுப்பிரதேசத்தில் புகையிலை மேற்கொள்ளப்படும் பகுதிகள்
படமாக்கப்பட்டதுடன் மேலும் புகையிலைச்செய்கை தடை செய்வதற்கான காரணங்கள், தடைசெய்வதால்
விவசாயிகள் எதிர்நோக்கும் சவால்கள் அதற்கான மாற்றுவழிகளையும் பிரேரணைகளையும் முன்வைத்தல்
இவ்வாய்வின் நோக்கமாகக் காணப்படுகின்றது. இவ்வாய்வானது முதலாம் நிலைத்தரவு, இரண்டாம்
நிலைத்தரவுகளை அடிப்படையாகக் கொண்டு நோக்கங்களின் அடிப்படையில் விபரணரீதியாக பகுப்பாய்வு
மேற்கொள்ளப்பட்டு முடிவானது பெற்றுக்கொள்ளப்பட்டது. புவியியல் தகவல் ஒழுங்கு முறையை பயன்படுத்தி
புகையிலைச்செய்கை மேற்கொள்ளப்படும் பகுதிகள் கிராமசேவகர் பிரிவில் அடையாளப்படுத்தப்பட்டது.
இதனடிப்படையில் முடிவுகள் முன்வைக்கப்பட்டது. ஆய்வுப்பிரதேசத்தில் பௌதீக, மானிட ரீதியான விடயங்கள்
புகையிலைச்செய்கை மேற்கொள்வதற்கு சாதகமானதாக அமைந்துள்ள போதிலும் நாட்டின் வளர்ச்சி,
கொள்கைகள், திட்டமிடல்கள் காரணமாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் காரணமாக எதிர்காலத்தில்
விவசாய சமூகம் எதிர்நோக்கும் பிரச்சனையானது சமூக, பொருளாதார ரீதியில் அவர்களை பின்தங்கிய
நிலைக்கு இட்டுச்செல்வதாக அமைந்துள்ளது. இப்பணப்பயிரானது தடை செய்யும் நிலையில் மக்களின்
வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன் வாழ்க்கைத்தரமும் குறைவடையும். புகையிலைச்செய்கை தடையினை 90%
மான விவசாயிகள் ஏற்றுக்கொள்ளாத தன்மையில் 80% மானவர்கள் மாற்றுப்பயிருக்கு மாறாத நிலையும்
காணப்படுகின்றது. ஏனெனில் புகையிலையானது அவர்களுக்கு பணப்பயிராகக் காணப்படுகின்றது. இவ்வாறான
பிரச்சனைகளை குறைப்பதற்காக சிறந்த மாற்றுப்பயிர்களை தெரிவு செய்து கொள்வதன் ஊடாக விவசாயம்
சார்ந்த, ஆய்வுப்பிரதேச மக்கள் மட்டுமின்றி அனைத்து விவசாய மக்களுக்கும் பயனடையக் கூடிய வகையில்
அவர்களின் சமூக, பொருளாதார நிலையினை உயர்த்திக்கொள்ள முடியும்.