Abstract:
ஈழத்து இலக்கிய வரலாற்றில் அஷ்ரப் குறிப்பிடத்தக்க ஒருவர். அரசியலுக்கு அப்பால் அவரிடம் கவித்துவம்
நிரம்பியிருந்தது. அஷ்ரப் ஒரு அரசியல்வாதியாக அன்றி, இலக்கியவாதியாகவே முதலில் அறிமுகமானார்.
அவரது இலக்கியத்திற்குள் அரசியல் நிரம்பியிருந்தது. ஒரு கட்டத்தில் அஷ்ரப் ஒரு இலக்கியவாதி என்பதை
விட நன்கு பண்பட்ட ஆட்சியாளனாக மாறினார். அதன்போதும் அஷ்ரபின் கவித்துவ புலமை
குறைந்துவிடவில்லை. அரசியலிலிருந்த துணுக்குகளை அஷ்ரப் இலக்கியத்தினூடாக சிந்திக்கலானார். அவரது
கம்பீரமான மேடைப் பேச்சுக்களின் ஊடே அவரது படைப்பாற்றலும் கவிதைகளை ஒப்புவிக்கும் திறனும்
மென்மேலும் வளர்ந்தது. அஷ்ரப் 1980களில் அரசியலில் முழு மூச்சாக ஈடுபட்டவர். அதற்கு முன்னமிருந்தே
தேசிய கட்சிகளிலும் தமிழரசுக் கட்சியிலும் அங்கத்துவம் வகித்தவர். பின்னர் முஸ்லிம் காங்கிரஸ் மூலம்
அரசியலில் உச்சத்திற்கு வந்தாலும் அவரது அனைத்து உயர்ச்சிக்கும் அவரது பாடசாலை வாழ்க்கைப்
பின்னணியும் இலக்கிய ஆளுமைப் பண்பும் காரணமாக இருந்தது. இந்தவகையில் கவிஞர் எம்.எச்.எம். அஷ்ரபின்
ஆக்கப் பணிகள் குறித்த அறிமுகக் கலந்துரையாடலொன்று இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளது.