Abstract:
இவ்வுலகில் மனிதனைப் படைத்த அல்லாஹ், அவன் சீரிய வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்காக
சட்டங்களை அருளினான். இச்சட்டங்களில் மனிதனால் சேர்க்கப்பட்ட, அழிக்கப்பட்ட, திருத்தப்பட்ட சட்டங்கள்
என எதுவும் இல்லை. இச்சட்டங்கள் பெரும்பாலும் மனிதனை ஒரு கட்டுக்கோப்புக்குள் வைத்திருப்பதோடு,
சிலவேளைகளில் மனிதனின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் அவையே முக்கிய காரணமாயமைகின்றன.
இவ்வகையில் பெண்களின் விடயத்தில் அல்குர்ஆன் பல இடங்களில் எச்சரிக்கை செய்கின்றது. நபி (ஸல்)
அவர்கள் பல தடவைகள் இது தொடர்பில் ஸஹாபாக்களுக்கு அறிவுரை கூறியிருக்கிறார்கள். முன்மாதிரியாக
வாழ்ந்தும் காட்டியிருக்கிறார்கள். பெண்களின் விடயத்தில் நீதமற்று அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு மாறு
செய்வோருக்கான தண்டனைகளை பல சந்தர்ப்பங்களில் குறித்துக் காட்டியுள்ளார்கள். இவ்வாறே தனது இறுதி
ஹஜ் பேருரையாம் ஹஜ்ஜதுல் விதாஃவிலும் கூட பெண்ணுரிமை தொடர்பில் சில முக்கிய அறிவுரைகளை
எடுத்துரைத்தார்கள். இது இவ்வாறிருக்க தற்கால எமது முஸ்லிம் சமூகமானது இதனைப்
புறக்கணிப்போராகவும்இ பெண்ணுக்குரிய உரிமைகளை சரியான முறையில் வழங்காது தன் மனம் போன
போக்கில் அவர்களை நடாத்துவோராகவும் உள்ளனர். அத்தகைய ஆண்களின் மனோநிலையை மாற்றி,
அவர்களை இஸ்லாமிய சட்டத்தின்பால் வழிநடாத்துவதே இந்த ஆய்வின் முக்கிய நோக்கமாகும்.
இவ்வாய்வானது முதற்தர தரவுகளான நேர்காணல், அவதானம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு
மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாய்வுப் பிரதேசத்தில் பெரும்பாலும் பெண்கள் உரிமைகள் மீறப்பட்டோராக
இருப்பதனை காணக்கூடியதாக உள்ளது. இந்நிலையினை சீர்செய்வதற்காக இஸ்லாமிய சட்டத்தின்
அடிப்படையிலான பெண்களின் உரிமை. அதன் அவசியம் மற்றும் முக்கியத்துவம் என்பன எல்லா
மட்டத்திலும் துறைசார் உலமாக்கள், சட்டத்தரணிகளின் துணைகொண்டு விளக்குதல், இஸ்லாமிய
வாரிசுரிமைச் சட்டத்தின் அடிப்படையிலான முன்மாதிரி குடும்பங்கள் உருவாக்கப்படுதல் என்பன போன்ற
இன்னும் பல விதந்துரைகள் இங்கு முன்வைக்கப்பட்டுள்ளன.