Abstract:
இஸ்லாமிய கண்ணோட்டத்தில் ஒரு முன்மாதிரிமிக்க குடும்பஉருவாக்கத்தின் அத்திவாரம் திருமணமாகும்.
இக்குடும்பங்களின் நலவாழ்வினை அடிப்படையாகக் கொண்டே இத்திருமணத்திற்கான அடிப்படையான
விதிமுறைகளை இஸ்லாம் பரிந்துரைத்துள்ளது. இத்தகைய திருமணத்தில் நலவாழ்வு ஏற்படவேண்டும்
என்பதற்காக மணக்கொடை வழங்கித் திருமணத்தைப் புரிவதனையே இஸ்லாம் அங்கீகரிக்கின்றது. மாறாக
இலங்கையில் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் நடைபெறுகின்ற திருமணங்களில் மணக்கொடைக்குப் பதிலாக
சீதனம் பெற்றுத் திருமணம் செய்யும் நடைமுறையே பெரும்பாலும் காணப்படுகின்றது. இருந்தபோதிலும்
ஆங்காங்கே ஒருசிலர் இஸ்லாமிய திருமண விதிகளைப் பேணியும் தமது வாழ்வை அமைத்துக்
கொள்கின்றார்கள். இந்தவகையில் இவ்வாய்வானது அம்பாறை மாவட்டத்திலுள்ள இஸ்லாமிய வரையறைகளைப்
பேணித் திருமணம் செய்தவர்களின் நலவாழ்வு பற்றி ஆராய முயலுகின்றது. பண்புசார் முறையில் அமைந்த
இவ்வாய்வானது சம்மாந்துறை, ஒலுவில், நிந்தவூர் ஆகிய பிரதேசங்களிலிருந்து 25 குடும்பங்களை மாதிரியாகத்
தெரிவவு செய்து ஆய்வுக்குட்படுத்தியுள்ளது. இவ்வாய்வுக்கான முதல்நிலைத் தரவுகளைப் பெற்றுக்கொள்ள
நேர்காணல் முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. இரண்டாம் நிலைத் தரவுகளானது, ஆய்வுக் கட்டுரைகள்,
சஞ்சிகைகள், நூல்கள் போன்றவற்றிலிருந்து பெறப்பட்டன. இந்தவகையில் இப்பிரதேச மக்களில் இஸ்லாமிய
வரையறைகளைப் பேணித் திருமணம் புரிந்தோர்களின் நலவாழ்வில் திருப்தியளிக்கக் கூடிய நிலைமைகள்
மிகவும் கடினமான முயற்சிகளால் அடைந்துகொள்ளப்படுவதாக இருக்கின்றது. இதற்குக் குடும்பத்தில்
காணப்படுகின்ற பொருளாதார ஆதரவின்மை, முறையான சொத்துப்பங்கீடின்மை ஆகிய காரணங்கள்
செல்வாக்குச் செலுத்தியூள்ளன. இருப்பினும், பொருளாதார ரீதியாக குடும்ப ஆதரவும், பலமும்
கொண்டிருந்தவர்களிடையே திருப்திகரமான நலவாழ்வு நிலைமைகள் காணப்படுகின்றமை
அவதானிக்கப்படுகின்றது. இதற்கேற்ப அவர்களின் நலவாழ்க்கை அமைந்துள்ளமை ஆய்வில்
வெளிப்படுத்தப்படுகின்றது. எனவே இவ்வாய்வானது இஸ்லாமிய வரையறையில், திருமணம் புரிந்து வாழும்
குடும்பங்களின் நலவாழ்வில் பொருளாதார மகிழ்ச்சி என்பது மிகவும் அடிப்படையாக அமைகின்றது
என்பதனையும் வெளிப்படுத்துகின்றது. எனவே, சமயம் சார்ந்த நிறுவனங்கள் இத்தகைய குடும்பங்களுக்கு
பொருளாதாரப் பங்களிப்பை வழங்கக் கூடியவகையில் தந்திரோபாயத் திட்டங்களை வகுத்தல் மற்றும் அதனை
நடைமுறைப்படுத்தல் போன்றனவற்றை முன்னெடுக்க வேண்டும். அத்துடன், ஒரு சமய நிறுவனம் சமூக
நிறுவனம் என்ற வகையில், முறையான சொத்துப் பங்கீட்டை சமூகத்தில் நடைமுறைப்படுத்துகின்ற வகையில்
செயற்படல் வேண்டும் என்பவைகளைப் பிரதானமான விதந்துரைப்புக்களாக இவ்வாய்வு முன்வைக்கின்றது.