Abstract:
இலங்கையின் வடபகுதியில் கி.பி 13 ஆம் நூற்றாண்டில் தோற்றம் பெற்றிருந்த அரசாக யாழ்ப்பாண அரசு
அடையாளங்காணப்பட்டுள்ளது. இவ்வரசானது தோற்றம் பெற்ற காலம் முதல் கி.பி 17ஆம் நூற்றாண்டின்
முற்பகுதியில் வீழ்ச்சியடையும் வரை அரசியல், பொருளாதார, சமூக, பண்பாட்டு நிலைகளில் சிறந்து
விளங்கியிருந்தது. இந்தவகையில் இவ்வரசு பொருளாதார நிலை பொறுத்துச் சிறந்து விளங்குவதற்கு இப்பகுதியில்
மேற்கொள்ளப்பட்டுவந்த வர்த்தக நடவடிக்கைகள் ஓர் காரணமாக விளங்கியிருந்தது. குறிப்பாக யாழ்ப்பாண
அரசர்கள் இப்பகுதியின் வளங்கள், உற்பத்திகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு சிறந்த பொருளாதாரக்
கொள்கையை வகுத்து வர்த்தக நடவடிக்கைகள் சிறப்பாக மேற்கொள்ள வழியமைத்திருந்தனர். இவர்களது
பொருளாதாரக் கொள்கைக்குச் சிறந்த எடுத்துக்காட்டு இப்பகுதியின் இயற்கை வளங்களை அடிப்படையாகக்
கொண்டு மேற்கொள்ளப்பட்டுவந்த வர்த்தக நடவடிக்கைகளை அரசின் ஏகபோக உரிமையின் அடிப்படையில்
மேற்கொண்டு வந்தமையாகும். இவ்வாறு சிறந்தவகையில் முன்னெடுக்கப்பட்டு வந்த வர்த்தக நடவடிக்கையானது
உள்நாட்டிற்குள்ளும், வெளிநாடுகளுடனும் இடம் பெற்றுவந்தமை குறிப்பிடத்தக்கது. உள்நாட்டு வர்த்தக நடவடிக்கை
யாழ்ப்பாண இராச்சியத்திற்குள்ளும், கண்டி இராச்சியத்துடனும் தரை மற்றும் கடல் வழியாகவும், வெளிநாட்டு
வர்த்தகம் தென்னிந்தியா, சீனா, யாவா, பாரசீகம், கிரேக்க மற்றும் உரோம நாடுகளுடன் கடல்வழியாக இடம்பெற்று
வந்தது. இவ் வெளிநாட்டு வர்த்தகம் வடபகுதித் துறைமுகங்களான மாதோட்டம், அரிப்பு, மன்னார், கச்சாய்,
கொழும்புத்துறை, பருத்தித்துறை, காங்கேசன்துறை, ஊர்காவற்துறை ஆகியவற்றினூடாகவும் மேற்கொள்ளப்பட்டு
வந்தன. இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட வர்த்தக நடவடிக்கைகளூடாக யாழ்ப்பாண அரசு பொருளாதாரரீதியாக சிறந்த
நிலையை அடைந்திருந்ததுடன் சர்வதேச அளவில் புகழ் பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாண அரசர்
காலத்தில் முன்னெடுக்கப்பட்ட வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பாக வரலாற்று நோக்கில் ஆய்வு செய்வதாக
இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளதுடன் இலக்கிய மற்றும் தொல்லியல் ஆதாரங்களையும் பயன்படுத்தி எழுதப்பட்டுள்ளது.
இவ் ஆய்வுக்கட்டுரை யாழ்ப்பாண அரசர் காலத்திற்கு முன்பான வட இலங்கையின் வர்த்தக நடவடிக்கை
தொடர்பாகவும் யாழ்ப்பாண அரசர்கலாத்தில் நடைபெற்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தக நடவடிக்கை
தொடர்பாகவும் ஆய்வுசெய்கின்றது.