Abstract:
பூச்சிகளாலும், விலங்குகளாலும் பயிர்களும் விளைச்சல்களும் அழிக்கப்படுவது விவசாயத்தில் ஒன்றும் புதிதல்ல. எனினும் படைப்புழுக்கள் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் புதியவை. ஆபிரிக்காவையும் பின் இந்தியாவையும் தாக்கியழித்த படைப்புழுக்கள் இப்பொழுது இலங்கையையும் தாக்கி விவசாயிகளை கதிகலங்க செய்துவிட்டன. இவ்வாய்வு பாலமுனை விவசாய விஸ்தரிப்பு நிலயத்திற்குட்பட்ட ஒலுவில் 01, பாலமுனை, தீகவாபி போன்ற பிரதேசங்களில் படைப்புழுக்களால் சோளச்செய்கையில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆராய்கின்றது. முதலாம் நிலைத்தரவுகள் மற்றும் இரண்டாம் நிலைத்தரவுகள் இரண்டையும் இவ்வாய்வு பயன்படுத்துகின்றது. தரவுகள் ஆய்வாளரால் பகுப்பாய்வு செய்யப்பட்டு முடிவுகள் பெறப்பட்டுள்ளன. இதன்படி இப்பிரதேசத்தில் சோளச் செய்கையில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலோனோரின் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதை இவ்வாய்வு கண்டுபிடித்துள்ளது. இப்பாதிப்புகள் அறுவடை செய்யப்பட்ட கதிர்களின் அளவைப் பாதித்துள்ளதோடு அவற்றின் தரத்தையும் பாதித்துள்ளன. இப்பாதிப்புகள் விவசாயிகள், வியாபாரிகள், நுகர்வோர் என மூன்று தரப்பினரையும் உள்ளடக்கிக் காணப்படுகின்றன. எனினும் விவசாயிகளே அதிகளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதனையும் ஆய்வு கண்டுபிடிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.