Abstract:
இந்திய வரலாற்றில் ஆங்கிலேயர்களின் ஆட்சிகாலமாகிய கி.பி. 1600 முதல் 1947 வரையிலான காலம் மிகவும் முக்கியத்துவம் மிக்கதாகும். அக்கால சமூக, அரசியல் மற்றும் பொருளாதார கூறுகளை ஆராயும்போது இதனை தெளிவாக காண முடியும். ஒரு நாட்டின் பொருளாதாரத்தைப் பற்றிய முழுமையான அறிவு வேண்டுமெனில் அதன் சமூக மற்றும் அரசியலை தௌ்ளத்தெளிவாக புரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். இந்தியாவின் நீண்ட வரலாற்று பண்பாட்டினை உலகெங்கும் கொண்டு செல்வதற்கு வரலாற்றில் வர்த்தகமும் வெளிநாட்டு வணிகரும் முக்கிய காரணிகளாக திகழ்ந்தன. இந்திய கைத்தறி நெசவு, விவசாயம் மற்றும் பிற கைத் தொழில்களும் இலாபமீட்டும் ஒன்றாகவே இருந்தது. ஆனால் ஐரோப்பியர்களின் வருகையால் நாட்டில் வர்த்தகப் போட்டிகளும், ஆதிக்கப் போட்டிகளும் அதிகரிக்கத் தொடங்கின. கி.பி. 1600ல் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி காலூன்றிய பிறகு இக்குழப்பங்கள் மேலும் அதிகரித்தன. கிழக்கிந்திய கம்பெனியின் பொருளாதார கொள்கையாலும் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளாலும் இந்திய கைத்தொழில்கள் எவ்வாறு பாதிப்படைந்தது என்பது பற்றியும் அதனால் சமூக மற்றும் அரசியல் தளங்களில் ஏற்பட்ட மாறுதல்கள் குறித்தும் இக்கட்டுரை பேசுகிறது. மேலும் ஆங்கிலேயர்கள் தங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் பொருட்டு இந்தியாவை எவ்வாறு பயன்படுத்திக் கொண்டனர் என்பது குறித்தும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் இக்கட்டுரை விளக்குகிறது.