Abstract:
ஆக்க இலக்கிய மொழி ஏனைய மொழியமைப்புக்களிலிருந்து வேறுபட்டு தனித்துவமானதாகக் காணப்படுகின்றன. எனவே அதனை மொழிபெயர்ப்பது சவாலாகும். அதனாலேயே எந்தவொரு ஆக்க இலக்கிய மொழிபெயர்ப்பும் மூல படைப்பின் முழுமையான மீளுருவாக்கமாக அமையாது எனக் குறிப்பிடப்படுகின்றது. ஒரு மொழியில் உள்ள குறிப்பிட்ட இலக்கண வகைமை மற்றொரு மொழியில் இருக்காது. இதனாலேயே மொழிபெயர்க்க இயலாமை ஏற்படுகின்றது. மொழிகளின் இலக்கண அமைப்பு, வாக்கிய அமைப்பு என்பன ஒன்றுக்கொன்று வேறுபட்டு அமைவதை அவதானிக்கலாம். அந்த வகையில் மூலமொழிப் பிரதியை மொழிபெயர்க்கும் போது சொல், இலக்கண அமைப்பு, சமநிலையைக் கட்டமைப்பதில் பல சவால்களுக்கு மொழிபெயர்ப்பாளன் முகம் கொடுக்க வேண்டி ஏற்படுகின்றது. மொழிபெயர்ப்பாளனுக்கு இரு மொழி இலக்கண அமைப்புகள், விதிகள், அவை எவ்வாறு தொழிற்படுகின்றன என்பது பற்றிய தெளிவும் விளக்கமும் இன்றியமையாததாகும். அத்தகைய தெளிவு காணப்படாத பட்சத்தில் அம்மொழிபெயர்ப்பு சிறந்ததொரு மொழிபெயர்ப்பாக அமையாது நேர்மொழிபெயர்ப்பாகக் காணப்படும். ஆங்கில மொழியின் தாக்கத்தை நாம் தமிழ் இலக்கியங்களில் காணக்கூடியதாகவுள்ளது. வேறு மொழியை தாய் மொழியாகக் கொண்டவர்களின் அன்றாட பேச்சு வழக்கில் ஆங்கில மொழிச் சொற்களின் பயன்பாடு சரளமானதாகும். எனவே இந்த ஆங்கில மொழிச் சொற்களை தமிழில் மொழி பெயர்க்கும் போது ஒரு மொழிபெயர்ப்பாளர் பல சவால்களை முகம் கொடுக்க வேண்டியுள்ளது. மூலமொழிச் சொற்பயன்பாட்டிற்கு ஏற்ப தமிழ் மொழியில் அதை மொழிபெயர்ப்பது மிகவும் கடினமானதாகும். ஒரு சில ஆங்கில மொழிச் சொற்களுக்கு தமிழ் மொழியில் கலைச் சொல் பற்றாக்குறை காணப்படுவதை நாம் உணரலாம். எனவே மொழிபெயர்ப்புச் சிக்கல் பற்றி பல ஆய்வுகள் மேற் கொள்ளப்பட்டாலும் ஆக்க இலக்கியத்தில் கையாளப்படும் ஆங்கில மொழிச் சொற்களை இலக்கு மொழியான தமிழ் மொழியில் மொழிபெயர்க்கும் போது ஒரு மொழிபெயர்பாளர் முகம் கொடுக்கும் சவால்கள் பற்றிய ஆய்வுகள் மிகக் குறைவாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளது. அக்குறையை தீர்க்கும் ஆய்வாகவே இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலக்கு மொழியான தமிழ் மொழியில் நிகரன்களை கண்டறிவதே இவ்வாய்வின் பிரதான நோக்கமாகும். அத்தோடு ஆக்க இலக்கிய மொழிபெயர்ப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தல், புதிய கலைச் சொற்களை உருவாக்குவதற்கான ஓர் முயற்சியை மேற்கொள்ளல் போன்ற உபநோக்கங்களை இவ்வாய்வு கொண்டுள்ளது. இவ்வாய்வில் விளக்கமுறை, ஒப்பீட்டு, மொழியியல் அணுகுமுறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.