Abstract:
இலங்கையில் உள்ளூர் ஆட்சி மற்றும் ஜனநாயகம் என்பவற்றுக்கான சிறந்த நிறுவனத் தளமாக
உள்ளூராட்சி மன்றங்கள் விளங்குகின்றன. உள்ளூர் ஜனநாயகத்தில் பரந்தளவான சிவில் சமூக
ஈடுபாடும் உள்ளூர் வளங்களை முறையாக முகாமைப்படுத்தலும் இன்றியமையாததாகும். எனினும்
இலங்கையில் உள்ள உள்ளூராட்சி அரசாங்கங்களுள் பெரும்பாலானவை உள்ளூர் மட்டத்தில்
ஜனநாயகத்தினையும் நல்லாட்சியினையும் கட்டியெழுப்புவதில் தோல்வி கண்டுள்ளன. அண்மைய
ஆய்வுகளின்படி இலங்கையின் உள்;ர் மட்ட அரசாங்கங்களின் செயற்றிறன் வீழ்ச்சியடைந்
துள்ளதுடன் மக்களின் உண்மையான பிரச்சினைகள் உள்ளூர் அரசாங்கங்களினால் அலட்சியப்
படுத்தப்படுகின்ற அதேவேளை, குறித்த மாநகர சபையின் அதிகாரம் தொடர்பில் அப்பிரதேசத்தில்
வாழும் மக்களிடம் காணப்படுகின்ற கருத்து நிலைகளும் தெளிவற்றதாக உள்ளன. இந்தப்
பின்னணியில் இவ்வாய்வு கிழக்கிலங்கையில் உள்ள மட்டக்களப்பு மாநகர சபையுடன்
தொடர்புடைய ஜனநாயக ஆட்சி நெருக்கடிகள் குறித்ததொரு அரசியல் பகுப்பாய்வினை
மேற்கொண்டுள்ளது. இவ்வாய்வு விபரணப் பகுப்பாய்வு முறையினை அடிப்படையாகக்
கொண்டதாகும். ஆய்வுக்கான தரவுகள் பல்வேறு முதலாம் மற்றும் இரண்டாம் நிலைத் தரவு
மூலாதாரங்களினூடாக பெறப்பட்டுள்ளன. ஆய்வினூடாகப் பெறப்பட்ட முடிவுகளின்படி உள்ளூர்
ஜனநாயகத்திற்கு முக்கிய தடையாக இருக்கும் ஒரு காரணியாக குறித்த மாநகர சபைக்கு
பரவலாக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் போதாமையினைக் குறிப்பிட முடியும். மட்டக்களப்பு மாநகர
அரசாங்கம் தமக்கு அதிகாரமளிக்கப்பட்ட விடயங்களில் சுயாதீனமாகச் செயற்படுவதற்கு
மத்தியரசின் ஊடான தடைகள் ஏற்படுகின்ற விடயமும் இங்கு கவனிக்கத்தக்கது. இதனால்
உள்;ர் ஜனநாயகத்தினை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதில் மட்டக்களப்பு மாநகர சபை
பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்கின்றன. உள்ளூர் ஜனநாயகத்துடன் தொடர்புடைய
பங்கேற்புச் செயன்முறை, அரசியல் கட்சிச் செயற்பாடு, பிரதிநிதித்துவப் பண்பு, மக்கள்
பொறுப்புக் கூறல் போன்றவற்றிலும் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன. இப்
பிரச்சினைகளை முறையாக அடையாளப்படுத்தி ஜனநாயக ஆட்சியினை கொண்டு
நடாத்துவதற்கான உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியது, குறித்த மாநகர சபையின்
பொறுப்பாகும்.