Abstract:
இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் வாழும் அதிகமான முஸ்லிம்களின் தாய்மொழியாகத்
தமிழ்மொழி காணப்படுகின்றது. தமிழ் மொழியில் எழுந்த இலக்கியங்களினால் கவரப்பட்ட
முஸ்லிம்கள் தமது சமயக் கோட்பாடுகளை வைத்து அவ்வாறான இலக்கியங்களைப் படைக்க
வேண்டும் என முற்பட்டனர். அவ்வாறு படைக்கப்பட்ட இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களிலும் தமிழ்
இலக்கியங்களின் செல்வாக்கு அதிகமாகவே காணப்படுகின்றது. இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களை
ஆழமாக நோக்கும்போது, அவற்றில் அதிகமானவற்றைப் படைத்த இலக்கியவாதிகள், அவற்றைச்
சமய இலக்கியம் என்ற வகையில் இஸ்லாமிய பண்பாடுகளோடு எழுதப்பட வேண்டும் என
கருதியதாகத் தெரியவில்லை. தமது இலக்கியத்திற்கு இலக்கிய உலகில் அங்கீகாரம் கிடைக்க
வேண்டும் என்ற அடிப்படையிலேயே சிந்தித்து இலக்கியங்களைப் படைத்துள்ளனர். அதேவேளை,
சமய சிந்தனைகளுக்கு வழங்கிய முக்கியத்துவத்தைவிட இரசனைக்கு அதிக முக்கியத்துவத்தை
வழங்கியுள்ளனர். அதனால்தான் பெரும்பாலான இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களில் பாதாதி கேச
வர்ணனைகளைச் செய்துள்ளனர். அதேபோல், உலா இலக்கிய மரபினையும் பின்பற்றி அங்க
வர்ணனைகளை செய்துள்ளனர். அதேவேளை, தமிழ் இலக்கியங்களின் தழுவலையும் பிற
சமயங்களின் செல்வாக்கினையும் பல இடங்களில் காண முடியும். இவ்வாய்வானது இஸ்லாமியத்
தமிழ் இலக்கியங்களில் தமிழ் இலக்கியங்களின் செல்வாக்கு எந்தளவுக்குக் காணப்படுகின்றது
என்பதனை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.முஹியித்தீன் புராணம், கனகாபிஷேகமாலை,
சீறாப்புராணம், புதூகுஷ்ஷாம், திருமக்காப் பள்ளு, திருமணக் காட்சி, இராஜநாயகம், இறவுசுல்கூல்
படைப்போர், திருக்காரணப் புராணம் முதலிய மரபு வகை இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களை
அடிப்படையாகக் கொண்டே இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மரபு வகை இஸ்லாமியத் தமிழ்
இலக்கியங்கள் இவ்வாய்வின் முதலாம் நிலைத் தரவாகவும் இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்கள்
தொடர்பாக இதுவரை வெளிவந்துள்ள ஆய்வு நூல்கள் இவ்வாய்வின் இரண்டாம் நிலைத் தரவாகவும்
பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாய்வில் சமூகவியல், விளக்கமுறை, ஒப்பீட்டு ஆய்வுமுறைகள்
பயன்படுத்தப்பட்டுள்ளன.