Abstract:
கோள அமைவிடம் காரணமாக பிராந்திய மற்றும் சர்வதேச அரசியல் நகர்வுகளில் இலங்கை
முக்கிய இடத்தினைப் பிடித்துள்ளது. சுதந்திரத்திற்கு முன்னரும் பின்னரும் வெளிநாடுகள்
இலங்கையுடனான உறவினை வளர்த்துக்கொள்வதில் ஆர்வம் காட்டிவந்திருப்பதனை அவதானிக்க
முடிகின்றது. சுதந்திரத்திற்கு பிந்திய தசாப்தங்களில் பிரித்தானியா, இந்தியா, சீனா, ஐக்கிய
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இலங்கையுடன் வலுவான உறவுகளைப் பேணிவந்துள்ளன. அணிசேரா
இயக்கத்தின் உருவாக்கத்தில் இலங்கை முதன்மை பங்காளராக இருந்தது. சிவில் யுத்த
காலப்பகுதியில் இலங்கை பல்வேறு நாடுகளிடமிருந்து உதவிகளைப் பெற்றுக்கொண்டது. மிக
அண்மைய தசாப்தங்களில், குறிப்பாக மஹிந்த ராஜபக்~வின் ஆட்சிக் காலத்தில் சீனாவுடனான
இலங்கையின் வெளியுறவுகள் வலுவடைந்திருந்தன. இதன்போது இந்தியா மற்றும் அமெரிக்கா
உள்ளிட்ட நாடுகள் இலங்கையின் வெளியுறவுக் கொள்கை தொடர்பில் அதிருப்தி கொண்டிருந்தன.
2015இல் புதிய அரசாங்கம் நிறுவப்பட்டதன் பின்னர் இலங்கையின் பொருளாதார கூட்டணிகள்
மாற்றியமைக்கப்பட்டன. இலங்கையில் பல சீன முதலீட்டுத் திட்டங்கள் நிறுத்திவைக்கப்பட்டன.
அமெரிக்காவின் உதவித் திட்டங்கள் மீண்டும் புதுப்பிக்கப்பட்டன. இக்காலப்பகுதியில் இந்தியாவும்
இலங்கைக்கு குறிப்பிடத்தக்களவு பொருளாதார மேம்பாட்டு உதவிகளை வழங்கியது. எனினும்
குறிப்பிட்ட சில மாதங்களுக்குள் இலங்கை சீனாவுடனான தனது உறவை மீண்டும் புதுப்பித்து,
இடைநிறுத்தப்பட்டிருந்த பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களையும் கட்டுமானப் பணிகளையும் மீளத்
தொடங்கியது. இவ்வாறு இலங்கை ஒரு நாட்டுடன் மட்டும் நிலையானதும் தீர்க்கமானதுமான
உறவினைக் கொள்ளாது, பொருளாதார மேம்பாட்டினை நோக்காகக் கொண்டு வெளிநாட்டு
உதவிகளுக்காக அவ்வப்போது பல்வேறு நாடுகளுடன் தனது வெளியுறவினைப் பேணிவந்துள்ளது.
இந்நிலையில் இலங்கையின் சீனாவுடனான உறவுகள் எவ்வாறு காணப்படுகின்றது என்பதனை
சீனாவின் மிகப் பெரிய முதலீட்டு திட்டமாக விளங்குகின்ற, இருபத்தியோராம் நூற்றாண்டின் கடல்சார்
பட்டுப்பாதை திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இக்கட்டுரை வரையப்பட்டுள்ளது. இக்கட்டுரையில்
கொழும்பு துறைமுக நகரத்திட்டமும் ஹம்பாந்தோட்ட அபிவிருத்தித் திட்டமும் கவனத்திற்
கொள்ளப்பட்டு, இலங்கைக்கு சீனா வழங்கிவரும் பொருளாதார மேம்பாட்டு உதவிகளின்
முக்கியத்துவம் மதிப்பிடப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ள தரவுகள் முன்னர்
வெளியிடப்பட்ட பல்வேறு கட்டுரைகள் மற்றும் ஆவணங்களிலிருந்து பெறப்பட்டவையாகும்.