Abstract:
பிரபஞ்சம் பற்றிய ஆய்வுகள் ஆரம்பகாலம் முதலே ஆரம்பித்து விட்டன. பிரபஞ்சத்தின் இருப்பு,
அதன் தோற்றம், கட்டமைப்பு, இயக்கம் குறித்த சிந்தனைகள் பல்வேறு காலகட்டங்களில்
பல்வேறு துறையினரால் பல கோட்பாடுகளாக முன்வைக்கப் பட்டிருக்கின்றன. இவைகள்
தொன்மம் சார்ந்தவைகளாகவும், சமயம் சார்ந்தவைகளாகவும், மெய்யியல் விளக்கங்களாகவும்,
விஞ்ஞானக்கோட்பாடுகளாகவும் அமைந்துள்ளன. பிரபஞ்சத்தின் தோற்றம், வரலாறு குறித்த சமய
விளக்கங்களில் பலவிதமான கடவுளின் செயற்பாடுகள் மையப்படுத்தப்பட்டிருக்கின்றன. இது
தொடர்பான கிரேக்கர்களின் விளக்கங்கள் ஒரளவு நடுநிலையானதாகவும் பௌதீக
அடிப்படையிலும் அமைந்திருக்கின்றன. தற்காலத்தில் பல நூற்றாண்டுகளாக நடைபெற்ற
விண்வெளி ஆய்வுகள், அதன் இயக்கம் மற்றும் சார்பியல் கொள்கைகளில் ஏற்பட்ட
முன்னேற்றங்கள் காரணமாக பிரபஞ்சம் பற்றிய விஞ்ஞான விளக்கங்கள் கிடைக்கப்
பெற்றிருக்கின்றன. குறிப்பாக விஞ்ஞான விளக்கங்களும் மெய்யியல் விளக்கங்களும் மாற்றங்கள்
நிறைந்ததாக அமைந்திருக்கின்றன. இவ்வாறான விளக்கங்கள் பன்முகத் தன்மையான
பல்வேறுவகையான விளக்கங்களாக அமையப்பெறினும் ஆழமாகப் பார்க்கையில்
அவைகளுக்கிடையில் ஒரு ஒருமித்ததன்மை காணப்படுவது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இவ்வொருமித்த தன்மையினை வெளிக்கொணர்வதே இவ்வாய்வின் நோக்கமாகும். இதற்கான
தரவுகள் தலைப்புத் தொடர்பான தமிழ் மற்றும் ஆங்கில நூல்கள், கலைக் களஞ்சியங்கள்,
அகராதிகள், முனைவர் பட்ட ஆய்வேடு போன்றவற்றிலிருந்து பெறப்பட்டுள்ளதுடன்
இவ்வாய்விற்கான முறையியலாக பகுப்பாய்வு மற்றும் ஒப்பீட்டு முறையியல்கள் பயன்படுத்தப்பட்
டிருக்கின்றன.