Abstract:
நவீன யுகத்தில் எழுந்துள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு உலகில் ஏற்பட்ட தொழிநுட்பப்
புரட்சியும் காரணமாகவுள்ளது. அன்றாட வாழ்வின் செயற்பாடுகளைச் செயல்திறன்
மிக்கதாகவும் துரிதமாக மேற்கொள்ளவும், அறிவுத் தேடலை அதிகரித்துக் கொள்ளவும் என
பல்வேறு நோக்கங்களை இலக்காகக் கொண்டு கண்டுபிடிக்கப்பட்ட தகவல் பரிமாற்ற
உபகரணங்கள் பல பிரச்சினைகளின் தோற்றுவாயாகக் காணப்படுகின்றது. வளரும்
பயிர்களான இளவயதினர் நாகரீகம் என்ற அநாகரீக மாயைக்குள் தெரிந்தும் தெரியாமலும்
விழுந்து, விழுமியங்களையும் கலாசாரங்களையும் புறந்தள்ளிவிடுவதனால் ஆபத்துக்களை
எதிர்நோக்குகின்றனர். அதிலும் பாடசாலை மாணவர்களின் சமூக வலைத்தளப் பாவனை
பெரிதும் அதிகரித்துள்ளது. அதனால் பருவத்தை மீறிய பழக்கவழக்கங்களுக்குள் தள்ளப்பட்டு
அவர்களின் விழுமியப் பண்புகள் சீர்கெட்டுப் போகும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். அந்த
வகையில் பாடசாலை மாணவர்களின் அதிகரித்த சமூகவலைத்தளப் பாவனையால்
அவர்களின் விழுமியத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களைக் கண்டறிவதை நோக்கமாகக்
கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாய்வுக்கான ஆய்வுப் பிரதேசமாக
கம்பஹா மாவட்டத்தில் மினுவாங்கொட கல்வி வலயத்திற்குட்பட்ட மீரிகம கோட்டத்திலுள்ள
4 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது. நோக்க மாதிரியைக்
கொண்டு கனிஷ்ட இடைநிலைப் பிரிவு மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள்
தெரிவு செய்யப்பட்டனர். இவ்வாய்விற்காக நேர்முகங்காணல், வினாக்கொத்து மற்றும்
அவதானம் ஆகிய ஆய்வுக் கருவிகள் பயன்படுத்தப்பட்டன. இவ்வாய்வுக் கருவிகள் மூலம்
நம்பகமும் தகுதியும் வாய்ந்த தரவுகள் பெறப்பட்டன. ஆய்வு முடிவுகளிலிருந்து, அதிகமான
மாணவர்கள் சமூக வலைத்தளங்களின் பாவனையால் தமது விழுமியத்தை இழந்து
வருகின்றனர். மேலும் உளவியல், சுகாதார, சமூக, ஒழுக்க ரீதியான பிரச்சினைகளுக்கு
முகங்கொடுக்க வேண்டிய நிலைக்கு பிள்ளைகள் ஆளாகியுள்ளமையும் இவை
மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை பெருமளவில் பாதித்துள்ளமையும் கண்டறியப்பட்டன.
இதனால் பாதிப்படையும் கற்றலையும் எதிர்காலத்தையும் வளம்படுத்த கற்றல்
செயற்பாடுகளில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தல், வழிகாட்டல் ஆலோசனைச் சேவையை
நடைமுறைப்படுத்தல், பெற்றோர் - பிள்ளை இடைத்தொடர்பை அதிகரித்தல் போன்ற
விதப்புரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.