Abstract:
இலங்கையில் காலத்துக்குக் காலம் சுதந்திரமானதும் நேர்மையானதுமான தேர்தல்கள்
இடம்பெறுவதுண்டு. எந்தவொரு தேர்தல் முறைமையாக இருப்பினும் எவ்வகை தேர்தலாக
இருப்பினும் தேர்தல் இடம்பெறுவதற்கு சிறிது காலத்திற்கு முன்பு வேட்பாளர்கள் தத்தம்
தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்வதுண்டு. இத்தகைய தேர்தல் பிரச்சாரத்திற்காக கட்சிகளும்
வேட்பாளர்களும் பெருந்தொகைப் பணத்தினைச் செலவு செய்வர். இன்றைய நிலையில்
அரசியலைத் தீர்மானிப்தில் வாக்காளர்களை விட பணமே செல்வாக்குச் செலுத்துகின்றது.
அரசியல் நிதிமயமாக்கல் செயற்பாட்டின் காரணமாக அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும்
தத்தமது அரசியல் இருப்பினை நிலைநாட்ட விளைகின்ற அரசியல் கலாசாரமே
காணப்படுகின்றன. அதாவது பிரதேச அபிவிருத்திற்குச் செலவு செய்யும் நிதியினை விட
பன்மடங்கு நிதியினை அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் தேர்தல் பிரச்சாரத்திற்காகச்
செலவு செய்கின்றனர். இலங்கையைப் பொறுத்தமட்டில் 1978 ஆம் ஆண்டிற்கு முன்னர் தேர்தல்
செலவீனங்கள் தொடர்பான சட்டங்கள் வலுவாகக் காணப்பட்டன. இருப்பினும் செலவு செய்யும்
பிரச்சார நிதி தொடர்பான வரையறைக் கட்டுப்பாடுகள் இரண்டாம் குடியரசு யாப்பில்
நீக்கப்பட்டுள்ளது. வரையறையற்ற பிரச்சார செலவின் காரணமாக வேட்பாளர்களுக்கு சமமான
போட்டிக்களம் மறுக்கப்பட்டு புதிய அரசியற் பிரமுவர்கள் உள்நுழைவதை மட்டுப்படுத்துகின்றது.
அத்தோடு அரச சொத்துக்கள் துஷ்பிரயோகப்படுவதோடு அரசியலில் ஊழல் அதிகரிக்கவும்
இவை காரணமாகின்றது. மேலும் மக்களின் நலன்கள் புறக்கணிக்கப்பட்டு தனியார்
நிறுவனங்களினது தலையீடுகள் மற்றும் சர்வதேச அழுத்தங்களுக்கு முகம் கொடுக்க
நேரிடுகின்றது. மேலும் நாட்டினுடைய கொள்கை மற்றும் இறைமையினைப் பாதிப்பதாகவும் இவ்
வரையறையற்ற தேர்தல் செலவீனங்கள் காணப்படுகின்றன. இத்தகைய தேர்தல் பிரச்சார
செலவுகளை வரையறுப்பதன் மூலம் ஜனநாயக அரசியலினை நிலைநாட்ட முடியும்.