Abstract:
பெண்களை மதித்து அவர்களை உயர்த்திய இஸ்லாமிய மார்க்கத்தில் பெண்களுக்கென்று
தனித்துவமான விடயமாக இறைவனால் கட்டளையிடப்பட்ட விடயமே இத்தாவாகும். இத்தா
தொடர்பான முழுத்தெளிவும் ஒவ்வொரு பெண்களும் கட்டாயமாக அறிந்திருக்க வேண்டும்.
இந்த வகையில் இவ்வாய்வானது இத்தா தொடர்பான முழுமையான தெளிவை
வழங்குவதற்காக “ இஸ்லாம் கூறும் இத்தா கோட்பாடுகளும், நடைமுறைகளும் : அடம்பன்
பிரதேசத்தை மையப்படுத்திய ஆய்வு” எனும் தலைப்பில் அமையப்பெற்றுள்ளது.
இவ்வாய்வானது அடம்பன் பிரதேசத்தில் இத்தாவிலிருக்கும் பெண்களின் நடைமுறைகளைப்
பரீசீலித்தல் மற்றும் இத்தா தொடர்பான நடைமுறைகளை இஸ்லாமிய கண்ணோட்டத்தில்
பகுப்பாய்தல் ஆகிய இரு நோக்கங்களைக் கொண்டதாக அமையப்பெற்றுள்ளது.
இவ்வாய்வில் முதலாம் நிலைத்தரவுகளாக அடம்பன் பிரதேசத்தில் (2018 - 2020) இரண்டு
வருட காலப்பகுதியில் கணவனை இழந்து இத்தாவிலிருந்த 10 பெண்களிடமும், தலாக் பெற்று
இத்தாவிலிருந்த 15 பெண்களிடமும் வினாக்கொத்துக்கள் வழங்கப்பட்டு தரவுகள்
சேகரிக்கப்பட்டுள்ளன. மேலும் நேர்காணல்கள் மூலமும் தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன.
இரண்டாம் நிலைத்தரவுகளாக இத்தா தொடர்பாக எழுதப்பட்ட புத்தகங்கள், முன்னைய
ஆய்வுகள், சஞ்சிகைகள், காணொளிகள் மூலம் இத்தாவுடைய கோட்பாட்டு ரீதியான
தகவல்கள் பெறப்பட்டுள்ளன. இறுதியி;ல் இஸ்லாம் கூறும் இத்தா கோட்பாடுகளோடு,
அடம்பன் பிரதேசத்தில் இத்தா இருக்கும் பெண்களின் நடைமுறைகளை ஒப்பிட்டு நோக்கும்
போது அடம்பன் பிரதேசத்தில் இத்தாவிலிருக்கும் பெண்கள் ஓரளவு இஸ்லாமிய இத்தா
கோட்பாடுகளைப் பின்பற்றுகிறார்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது.