Abstract:
சினிமா ஓர் ஆற்றுப்படுத்துகைக் கலை. அது வீரியமும் வெகுஜன செல்வாக்கும் கொண்டது.
அறேபிய இலக்கியத்தில் சினிமாவுக்கு தனித்துவமான இடமுண்டு. அறேபிய சினிமா என்பதன்
மூலம் அறபு நாடுகளில் காணப்படும் சினிமாசார் தொழிற்பாடு கருதப்படுகின்றது. இலங்கைச்
சூழலில் அண்மைக்கலாமாக உலக சினிமாக்கள் தொடர்பான கருத்தாடல்கள் இடம்பெற்று
வருகின்ற நிலையில் அறபு சினிமா பற்றிய அறிமுகம் அரிதாகவே காணப்படுகின்றது. இது
தவிர, அறபு சினிமாவில் இஸ்லாமிய நம்பிக்கையுடன் தொடர்புபட்ட மரபுசார்ந்த அம்சங்களை
சுதந்திரமாக காட்சிப்படுத்த முடியாதுள்ளது. குறிப்பாக நபிமார்கள், நபித்தோழர்கள் போன்ற
முக்கியஸ்தர்களை உருவகப்படுத்தி காட்சிப்படுத்த இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்தப்பின்னணியில், இலங்கையில் அறபு சினிமாத்தளத்தினை அறிமுகப்படுத்தி அது
தொடர்பான கருத்தாடலை கல்விப்புலத்தில் ஆரம்பிப்பதனூடாக அறேபிய சினிமா
எதிர்கொள்ளும் சமயம் சார் பிரச்சினைகளை வெளிக்கொணரவும் முடியம். இதற்காக,
இயக்குனரும் தயாரிப்பாளருமான முஸ்தபா அக்காதின் திரைப்படம் அர்ரிஸாலா
திரைப்படத்தின் ஆய்வுக்காக எடுத்துக்கொள்ளப்படுகின்றது. ஆய்வு நோக்கங்களை
அடைந்து கொள்வதற்காக விவரண மற்றும் பகுப்பாய்வியல் முறைகள் பயன்படுத்தப்பட்டன.
முதலாம் நிலைத்தரவுகளுடன் இரண்டாம் நிலைத்தரவுகளாக நூல்கள், சஞ்சிகைள்,
பத்திரிகைகள் மற்றும் இணையம் போன்றவற்றின் மூலம் தரவுகள் பெறப்பட்டு
ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. அறேபிய சினிமாவின் வளர்ச்சி இன்று அறபு நாடுகளை
அதிகளவில் பாதிக்கின்றது. அது தனக்கேயுரிய தனித்துவமான பண்புகளுடன் மேற்கத்தைய
சினிமாவுக்கு நிகராகவும் அதேவேளை உள்ளடக்கத்தில் தனித்துவத்துடனும்
முன்னேறியுள்ளது. சினிமாவின் மூலம், தமது கலாசார, நாகரிக அம்சங்களை வெளிப்படுத்த
அறேபிய இயக்குனர்கள் தவறவில்லை. அவர்கள் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் மிகச்
சிறந்த படைப்புக்களை தந்துள்ளனர். அனுமதி வரையறுக்கப்பட்ட நிலையிலும் நபிகள்
நாயகம் பற்றிய திரைக்கதையை தொழிநுட்ப யுக்திகளைக் கையாண்டு முஸ்தபா அக்காத்
படமாக்கியுள்ளார். திரையிலல்ல, பார்வையாளனை நிஜக் கதைக்குள் கொண்டு செல்லும்
ஆற்றலை இப்படம் கொண்டிருக்கின்றது. ஆயினும், வரலாற்று நம்பகத்தன்மையை அவரால்
முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை. அறேபிய இலக்கியத்தின் மிகப்பலமானதொரு விடிவம் என்ற வகையில் இது தொடர்பான பரந்த ஆய்வுடன் கூடிய விழிப்புணர்வினை அறபு
மொழி கற்பிக்கும் நிறுவனங்கள், கல்விக் கூடங்கள் எதிர்காலத்தில் மாணவர் மத்தியில்
ஏற்படுத்தி திறனாய்வினை வலுவூட்டும் கலைத்திட்டங்களை உருவாக்க வேண்டும் என்றும்
மாற்று சினிமா தொடர்பான வழிகாட்டல் மற்றும் பயிற்சிகளை வழங்க வேண்டுமென்றும்
இவ்வாய்வு பிரேரிக்கின்றது.