Abstract:
இருபத்தோராம் நூற்றாண்டில் விழிப்புடன் இயங்கும் கருவியாக ஊடகங்கள் அமைந்துள்ளன.
இவ்வூடகங்களில் பெண்களின் பங்களிப்புக்களானது வரலாற்றுரீதியாக ஆரம்பகாலங்களில்
மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்பட்டு வந்தாலும், இருபத்தோராம் நூற்றாண்டில்
மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பெண்ணிய எழுச்சிப் போராட்டங்களானது, ஊடகத்துறையில்
பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கச் செய்துள்ளன. இதன் விளைவாக, இத்துறையில்
பெண்கள் பல்வேறுதளங்களில் பங்காற்றி வருகின்றனர். மேலும் தற்கால ஊடகங்களின்
வெற்றியில் பெண்கள் பாரிய பங்களிப்பையும் செலுத்தி வருகின்றனர்;. இருந்த போதிலும்,
இத்தகைய பங்களிப்புக்களை ஆண்களின் பங்களிப்புக்களுடன் ஒப்பிடுகின்றபோது, அவை
குறிப்பிடத்தக்க அடைவினை அடையவில்லை என்பதனை ஆய்வுகள்
அடையாளப்படுத்துகின்றன. இவ்வகையில் இலங்கையிலும் பெண்கள் ஊடகத்துறையில்
பங்பகளிப்புக்களைச் செலுத்தி வருகின்றனர். இருப்பினும் அத்தகைய பங்களிப்புக்கள்
திருப்தியடைகின்ற மட்டத்தில் அமையவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேவேளை
இத்துறைகளில் பணியாற்றுகின்ற பல பெண்கள் திறமையாளர்களாகப் பல துறைகளில்
தங்களை அடையாளப்படுத்தி வருகின்றனர். இருப்பினும் ஏனைய பெண்கள் இத்தகைய
இடத்தைப் பெறுவதற்கான தகுதிகளைக் கொண்டவர்களாக இருப்பினும், அவர்கள்
அத்தகைய அடைவுகளைப் பெறவில்லை. எனவே இவ்வாய்வானது பெண்களின்
ஊடகத்துறைப் பங்களிப்பு குறைவாக இருப்பதற்கான காரணங்களை கண்டறிய
முனைகின்றது. இவ்வாய்வை மேற்கொள்ள ஆய்வு முறையியலாக பண்புநிலைசார் ஆய்வைப்
பயன்படுத்தியுள்ளது. இவ்வாய்வு நோக்கத்தை அடைந்துகொள்ள இலங்கையில் தமிழ்
மொழியில் சேவை வழங்குகின்ற ஊடகத்துறைகளில் உள்ள பெண்கள் ஆய்வுச்
சனத்தொகையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஆய்வு மாதிரியாக தமிழ்
ஒலிபரப்புச் சேவையில் பணியாற்றுகின்ற பெண்கள் நோக்க மாதிரியின் அடிப்படையில்
தெரிவுசெய்யப்பட்டுளள்ளனர். இவ்வாய்விற்கான தரவுகளைச் சேகரிப்பதற்காக ஆழமான
கலந்தரையாடல் நுட்பம் பயன்படுத்தப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாய்வின்
முடிவாக இலத்திரனியல் ஊடகத்துறையில் பெண்களின் அடைவுகள் குறைந்தமட்டத்தில்
காணப்படுவதில் ஆணாதிக்க கருத்தியல்கள், குடும்பம், மற்றும் பெண் தொடர்பான சமூகப்
பார்வைகள் ஆகிய காரணங்கள் பிரதானமாகச் செல்வாக்குச் செலுத்துகின்றன. எனவே
பெண்கள் ஊடகத்துறையில் அடைவுகளைப் பெற்றுக்கொள்வதற்குத் தேவையான
நடைமுறைச் சாத்தியக் கொள்கைகளை உருவாக்கவேண்டும் என்பதனை இவ்வாய்வு
முன்வைக்கின்றது.