Abstract:
அல்லாஹ் அல்குர்ஆனில் கூறுகின்ற ‘உம்மதன் வஸதா’ எனும் சொற்றொடர் தற்கால
உலகச் சூழலில் குறிப்பாக இலங்கைச் சூழலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
முஸ்லிம்கள் தமது வாழ்வொழுங்கை அல்குர்ஆனிய சிந்தனையின் அடிப்படையில்
அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதனால் இது பற்றிய ஆய்வு பெறுமானம் மிக்கதாக
அமைகின்றது. அச்சொற்றொடருக்;கான ஆரம்பகால தப்ஸீர் நூல்கள் மற்றும் நவீனகால
தப்ஸீர் நூல்களில் காணப்படும் விளக்கங்களை (தப்ஸீர்) அடையாளப்படுத்தல் மற்றும்
காலவோட்டத்தில் ‘உம்மதன் வஸதா’ என்பதற்கான விளக்கத்தில் மாற்றங்கள்
நிகழ்ந்துள்ளதா ஆகிய ஆய்வு நோக்கங்களை கண்டறிய இவ்வாய்வு முயற்சிக்கின்றது.
இதற்காக, இவ்வாய்வானது விபரிப்பு ஆய்வு முறையியலை பயன்படுத்துகின்றது. இரண்டாம்
நிலைத்தரவுகளை மையமாகக் கொண்ட இவ்வாய்விற்கான தரவுகள் தப்ஸீர் நூல்கள்,
ஆய்வுகள், நூல்கள், இணையக் கட்டுரைகள் மூலம் பெறப்பட்டுள்ளன. இந்தவகையில்,
ஆரம்பகால, நவீனகால தப்ஸீர் நூல்கள் ‘உம்மதன் வஸதா’ என்பது ‘இஃப்ராத்’ எனும்
வரம்புமீறலுக்கும் ‘தஃப்ரீத்’ எனும் பொடுபோக்கிற்கும் இடையில் நடுநிலை
பேணிக்கொள்வதனையே பிரதானப்படுத்துகின்றன. அவ்வாறே, எல்லா விடயங்களிலும்
நடுநிலைமையை பேணிக் கொள்வதை சிறப்பித்துக் கூறுகின்றன. அத்தோடு ‘உம்மதன்
வஸதா’ என்பதற்குரிய விளக்கத்தில் ஆரம்பகால, நவீனகால தப்ஸீர் நூல்களுக்கிடையில்
ஒத்த தன்மைகளை அடையாளப்படுத்த முடிகின்றது. தப்ஸீர் நூல்கள் எழுதப்பட்ட கால
கட்டத்தில் காணப்படும் விடயங்களை மையமாக வைத்து, முன்னைய நூல்களில்
காணப்படும் விடயங்களையும் உட்பொதிந்த அமைப்பில் தப்ஸீர் நூற்கள் எழுதப்படுகின்றன.
இந்தவகையில், காலமாற்றம் அல்குர்ஆனிய வசனங்களுக்குரிய தப்ஸீர்களில் தாக்கம்
செலுத்துவதாக அமைகின்றது. அல்குர்ஆன் மறுமை வரையுள்ள காலத்திற்கு ஏற்புடையது
என்றவகையில், அதிலுள்ள வசனங்களுக்கு காலத்தை கருத்திற் கொண்டு விளக்குவது
அவசியமானதாகவும் அது நடுநிலைப் போக்கிக்கான ஆதாரமாகவும் அமைகின்றது என்பன
இந்த ஆய்வின் முடிவுகளாகும்.