Abstract:
விவாகரத;தினை தொடர்ந்து ஒரு முஸ்லிம் பெண்ணுக்கு பராமரிப்பை வழங்குவது தொடர்பில்
பல விவாதங்களும் விமர்சனங்களும் வெளிவந்த வண்ணமுள்ளன. இருப்பினும் சில நாடுகள்
விவாகரத்துக்கு பிந்தைய பராமரிப்பினை வழங்குவது தொடர்பில் வித்தியாசமான சட்ட
ஏற்பாடுகளையும் கொண்டுள்ளன. இந்நிலையில் இவ்வாய்வானது தற்போதைய இலங்கை
முஸ்லிம் தனியார் சட்டத்தின் கீழ் விவாகரத்தான பெண்களுக்குரிய பராமரிப்பு
உரிமைகள் குறித்த சட்ட நிலையை மதிப்டுகிறது. பண்புரீதியான இவ்வாய்வுக்குரிய
கோட்பாட்டு ரீதியிலான தகவல்களைப் பெற இலக்கிய மீளாய்வுகள் பகுப்பாயப்பட்டு
விவரிக்கப்பட்டுள்ளன. பல முஸ்லிம் நாடுகளில் பெண்களுக்கு விவாகரத்துக்கு பிந்தைய
பராமரிப்பானது குறிப்பிட்ட காலத்துக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இலங்கை
பொதுச்சட்டத்தின் கீழ் விவாகரத்தின் போது பெண்களுக்குரிய நிவாரணத்தை பெற்றுக்
கொடுப்பதற்கான பரந்த தற்றுணிவு இலங்கை நீதிமன்றங்களுக்கு இருப்பதனால்
விவாகரத்தின் போதைய தீர்வுகளாக மொத்தப்பணம், மாதாந்த வருடாந்த கொடுப்பனவுகள்
அல்லது சொத்து உரிமை மாற்றம் என்பன வழங்கப்படுகிறது. இலங்கையில் விவாகரத்துப்
பெற்ற ஒரு முஸ்லிம் பெண் இத்தா காலத்தின் போது தாபரிப்பை பெற உரித்துடையவளாக
கருதப்பட்டாலும் இவ்வுரிமை காதி நீதிபதியின் தற்றுணிவின் அடிப்படையிலேயே
அமைந்துள்ளதுடன் ஒன்றிணைந்து வாழ்தலை காரணமின்றி கைவிட்ட பெண்ணுக்கு தாபரிப்பு
உரிமை வழங்கப்படுவதில்லை. எனினும் சட்டத்தின் பிரிவு 47 (1) (எ) இல் ஒரு மனைவியின்
அல்லது விவாகரத்தான மனைவியின் பிரசவச செலவுக்கான கோரிக்கை பற்றியும் பிரிவு 47
(1) (இ) இல் நெறிமுறையான மற்றும் நெறிமுறையற்ற பிள்ளைக்குரிய பராமரிப்பு
தொடர்பிலும் சட்டயேற்பாடுகள் காணப்படுகின்றன. எனினும் MMDAயின கீழ் விவாகரத்துக்கு
பிந்தைய பராமரிப்பு தொடர்பில் சட்டயேற்பாடுகள் இல்லாதது பெண்களுக்கு நிதி
உதவிகளை இல்லாமல் செய்ய வழிவகுக்கிறது. இலங்கை முஸ்லிம் தனியார் சட்டத்தில்
விவாகரத்துக்குப் பிந்தைய பராமரிப்பு தொடர்பில் சட்ட சீர்திருத்தங்கள் தேவை
என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் சட்ட வரைவுதாரர்களும் பெண் நலன்சார்
அமைப்புகளும் இவ்விடயத்தை கவனத்திற் கொள்வதுடன் இது தொடர்பில்
எதிர்காலத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளல் போன்ற பரிந்துரைகளையும்
இவ்வாய்வுக் கட்டுரை வலியுறுத்துகிறது.