Abstract:
மனித விழுமிய மேம்பாடுகளைக் கற்பித்தல் எனும் கருத்தியல் இன்றைய
கல்விச் சிந்தனைகளில் முக்கியத்துவம் பெறுகிறது. இன்றைய கல்விமுறை மாணவர்களிடம்
அறிவை வளர்த்துச் செல்லுமளவிற்கு மனித விழுமியங்களை வளர்த்துச் செல்வதில்லை.
வாழ்க்கைக்குரிய மனித விழுமியங்களைப் போதிப்பதற்கு ஏட்டுக் கல்வி மட்டுமன்றி
இணைப்பாடவிதான செயற்பாடுகளும் அவசியமாகின்றன. இதனடிப்படையில் மாணவர்கள்
மத்தியில் சமூக விழுமியங்களை மேம்படுத்துவதில் இணைப்பாடவிதான செயற்பாடுகளின்
பங்களிப்பினை ஆராயும் வகையில் இவ்வாய்வானது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாய்வானது அளவை நிலை ஆய்வாக வடிவமைக்கப்பட்டு மொனராகலை மாவட்டம்,
பிபிலை கல்வி வலயத்திலுள்ள தமிழ்மொழிமூலப் பாடசாலைகளில் 1AB, 1C வகைப்
பாடசாலைகள் நான்கினதும் அதிபர்கள் நோக்க மாதிரியின் அடிப்படையிலும், இடைநிலைப்
பிரிவு மாணவர்களில் 88 பேர் 10:1 என்ற விகிதத்திலும், 21 ஆசிரியர்கள் 4:1 என்ற
விகிதத்திலும், 18 பெற்றோர்கள் 5:1 என்ற விகிதத்திலும் இலகு எழுமாற்று மாதிரியின்
அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். வினாக்கொத்து மூலம் மாணவர்கள் மற்றும்
ஆசிரியர்களிடமிருந்தும், நேர்காணல் மூலம் அதிபர்கள் மற்றும் பெற்றோர்களிடமிருந்தும்
பெறப்பட்ட தரவுகள் Microsoft Excel மூலம் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டு இறுதி
முடிவுகள் பெறப்பட்டன. இணைப்பாடவிதான செயற்பாடுகள் மாணவர்களது நேரத்தையும்,
முயற்சியையும் வீணடிப்பதாக பாடசாலைச் சமூகத்தினர் கருதுகின்றனர். இணைப்பாடவிதான
செயற்பாடுகளில் பெற்றோரின் ஈடுபாட்டைத் தீர்மானிப்பதில் அவர்கள் கொண்டிருக்கும்
விழிப்புணர்வும், கல்வியறிவும் முக்கிய காரணிகளாக அமைகின்றன. ஆசிரியர்களின்
பங்களிப்பு மிகக் குறைவாகும். வளப்பற்றாக்குறை காரணமாக சில செயற்பாடுகள்
புறக்கணிக்கப்படுகின்றன. இணைப்பாடவிதான செயற்பாடுகள் பாடசாலைகளில் முறையாக
நடைமுறைப்படுத்தப்படும் போதே மாணவர்கள் மத்தியில் சமூக விழுமியங்கள்
மேம்பாடடைகின்றன. எனவே பாடசாலைகளில் இணைப்பாடவிதான செயற்பாடுகள் மீதான
மாணவர்களின் முறையான பங்குபற்றுதலை அதிகரிக்கச் செய்தல் வேண்டும் என்பன
கண்டறியப்பட்டு விதப்புரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.