dc.description.abstract |
மனிதன் தனது தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காகவும் அதற்கான செலவீனங்களை
எதிர்கொள்வதற்காகவும் நல்ல வருமானத்தை பெற்றுக்கொள்வதற்கு கடுமையாக
முயற்சிக்கின்றான். இவ்வாறே ஒவ்வொரு மக்களும் அவர்களினுடைய தேவைகளை
நிறைவேற்றிக்கொள்வதற்காக ஜீவனோபாய தொழில்களில் வெற்றியடைந்தும் உள்ளனர்.
அந்த வகையில் அளிகம்பை பிரதேச மக்களின் பொருளாதாரமானது அவர்களினுடைய
வாழ்வில் வருமானம் மற்றும் செலவீனத்தை பொறுத்து வேறுபடுகின்றது. அவ்வாறு
இருக்கையில் நாம் இவ் ஆய்விற்கு உட்படுத்திய இச்சமூகமானது வன ஜீவராசிகளாக
இருந்து இன்று நாட்டுப்புறத்தில் குடியேறிய மக்களாக உள்ளனர். இவ்வாறான
மக்களினுடைய வாழ்வின் பொருளாதார அபிவிருத்தியில் தொழில் முறையின் வகிபாகம்
தொடர்பான இவ்வாய்வானது கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட்டத்தின் ஆலையடிவேம்பு
பிரதேச சபை பிரிவிற்குட்பட்ட அளிகம்பை கிராமத்தை மையமாகக் கொண்டு
ஆராயப்பட்டுள்ளது. பொருளாதார அபிவிருத்தியில் தொழில்முறை பற்றிய இவ் ஆய்வானது
இக்கிராமத்தின் பொருளாதார நிலைகளைக் கண்டறிதல், அபிவிருத்திக்கான உள்ளார்ந்த
வளவாய்ப்புக்களை இனங்காணல், தொழில் அபிவிருத்திக்கான பரிந்துரைகளை
முன்மொழிதல் ஆகியவற்றின் அடிப்படையில் ஆராயப்பட்டுள்ளது. அவ்வகையிலே இவ்
ஆய்வானது முதலாம் நிலைத் தரவுகள் மற்றும் இரண்டாம் நிலைத்தரவுகளை
அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதலாம் நிலைத்தரவுகளைப் பெற்றுக்
கொள்வதற்காக கள ஆய்வு, வினாக்கொத்து, நேர்காணல் மற்றும் அவதானிப்பினூடாக
சேகரிக்கப்பட்டதோடு மேலும் இரண்டாம் நிலைத் தரவுகளாக இக்கிராம மக்களினுடைய
வாழ்க்கை பற்றிய புத்தகங்கள், ஆய்வுக் கட்டுரைகள்இ சஞ்சிகைகள்இ இணையத்தளம்
போன்றவைகளிலிருந்தும் மேலதிக தகவல்கள் பெற்றுகொள்ளப்பட்டன.
இந்த ஆய்வுப் பிரதேசத்தில் வாழும் மக்கள் விவசாயம், கூலிக் கைத்தொழில், மீன்பிடி,
வீட்டுத்தோட்டம், வீட்டில் சொந்தமாக கடை நடாத்துதல், தையல், அரச தொழில் மற்றும்
ஆடு, மாடு வளர்ப்பு போன்றவைகளையே தமது ஜீவனோபாய தொழில்களாக
கொண்டுள்ளனர். இத்தொழில் முயற்சியினூடாக இம்மக்கள் பொருளாதார அபிவிருத்தியில்
பாரிய பங்கினை வகிக்கின்றனர் என்பது எமது ஆய்வுத்தரவுகள் மூலம் அறிந்து கொள்ள
முடிகிறது. இது இம்மக்களின் முன்னேற்றத்தை நோக்கிய சிறு நகர்வேயாகும். அவர்களின்
இப்பொருளாதார அபிவிருத்தியில் மென்மேலும் வளர்ச்சி காண வேண்டுமெனில் அரச மற்றும அரச சார்பற்ற நிறுவனங்களும் இம்மக்களுக்கான உதவிகளை வழங்கி கை கொடுக்க
வேண்டும். இதனூடாக இவர்களின் தாழ்மை மனப்பாங்கு நீக்கப்பட்டு சமூகத்தில் ஏனைய
மனிதர்களைப் போல் சம அந்தஸ்து உடையவர்களாக மாற்றம் பெறுவர். இவ் ஆய்வின்
மூலம் இந்த பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வழிகளும் பரிந்துரை
செய்யப்படுகின்றது. |
en_US |