Abstract:
புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி கைவிடப்பட்டு ஒதுக்கப்படும்
நோயாளிகளையும், சிகிச்சைக்காக தூர இடங்களிலிருந்து வருகை தரும் நோயாளிகள்
தங்குவதற்காகவும் மனிதாபிமான அடிப்படையில் உதவுவதற்கு முஸ்லிம் கல்விமான்கள்,
தனவந்தர்கள் மற்றும் சமூக அமைப்புக்கள் முயற்சி எடுத்து, Eastern Cancer Care Hospice
என்ற பெயரில் ஏறாவூரில் 2015ஆம் ஆண்டு உருவாக்கியமையானது இருசாராரினதும்
வாழ்விலும் பாரிய முன்னேற்றம் ஏற்பட வழியேற்பட்டுள்ளது. இவ்விருசார்
நோயாளிகளுக்காக இந்நிலையம் மேற்கொள்ளும் பங்களிப்பை கண்டறிவதோடு, சேவை
நாடியின் திருப்தி நிலையை மதிப்பிடுவதை நோக்கமாகக் கொண்டு இவ்வாய்வு
அமைந்துள்ளது. பண்பு ரீதியில் அமைந்த இவ்வாய்வு நேரடி அவதானம் மற்றும்
நிருவாகிகள், நோயாளிகள் உள்ளடங்களாக பத்து நபர்களிடம் நேர்காணல்
மேற்கொள்ளப்பட்டு, தகவல்கள் பெறப்பட்டுள்ளன. பெறப்பட்ட தகவல்கள் குறிமுறை
அடிப்படையில் பகுப்பாய்வு செய்யப்பட்டு, முடிவுகள் பெறப்பட்டன. பொருத்தமான
காற்றோட்டமுள்ள கடற்கரையை அண்டிய இடத்தில் இந்நிலையம் அமைந்துள்ளதோடு,
நோயாளிகளின் தன்மைக்கேற்ப தங்குமிட வசதிகள் அதி நவீன முறையில் அமைத்துக்
கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் விடுதியில் தங்கும் நோயாளிகள் மற்றும் அவர்களுடன்
உதவிக்காக இருப்பவர்களுக்கு நிலையத்தில் இயற்கையான முறையில் அதிவிசேடமாக
உற்பத்தி செய்யப்பட்ட, அதிக போசனைச்சத்தைக் கொண்ட உணவுகள் இலவசமாக
வழங்கப்படுகின்றன. புற்றுநோயியல் நிபுணரின் கண்கானிப்பில் நோயாளிகள் இருப்பதோடு,
ஏனைய நோய்களுக்கான சிகிச்சைக்காக பல வைத்தியர்கள் இலவச சேவையை
வழங்குகின்றனர். அவசர நிலையில் உள்ள நோயாளிகளின் மேலதிக சிகிச்சைக்குச்
கொண்டு செல்வதற்காக அதிசொகுசு மருத்துவ ஊர்தி (Ambulance) எந்நேரத்திலும் தயார்
நிலையில் வைக்கப்பட்டுள்ளது. நோயாளிகளின் பொழுது போக்கிற்காக இயற்கை தோட்டம்
தயார்படுத்தப்பட்டுள்ளது என்பன இவ்வாய்வின் கண்டுபிடிப்புகளாகும். அத்தோடு இத்தகைய
அரவணைப்பினால் நோயாளிகள் திருப்தி அடைந்துள்ளதோடு அவர்களின் நன்றியை பல
வழிகளிலும் பகிர்ந்து கொள்கின்றனர். இத்தனை வசதிகளுக்குமான உதவிகள் முஸ்லிம்
தனவந்தர்களிடமிருந்து மாத்திரமே பெறப்படுவது மனிதாபிமானத்தின் உயர்ந்த நிலையை
எடுத்துக்காட்டுகின்றது. இந்நிலையம் மேலும் வளம் பெறுவதற்கான பரிந்துரைகளும்
இறுதியில் முன்வைக்கப்பட்டுள்ளன.