Abstract:
விளையாட்டு மனிதனின் பல்துறைசார் ஆளுமை விருத்தியில் பாரிய செல்வாக்குச்
செலுத்துகிறது. இஸ்லாம் விளையாட்டில் ஈடுபடுவதை வரவேற்கிறது. இஸ்லாத்தில் பெண்கள்
விளையாட்டில் ஈடுபடுவதும் அனுமதிக்கப்பட்டதாகும். அந்தவகையில் பெண்கள்
விளையாட்டில் ஈடுபடுவதற்காக இஸ்லாம் குறிப்பிடும் ஒழுங்குகள் மற்றும் வரையறைகளைக்
கண்டறிந்து, பல்கலைக்கழக முஸ்லிம் மாணவிகளின் விளையாட்டுடனான ஈடுபாட்டை
மதிப்பீடு செய்து, அதில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகளை அடையாளப்படுத்தும்
நோக்கில் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது. பண்புசார் ஆய்வு வழிமுறைகளைப் பயன்படுத்தி
மேற்கொள்ளப்பட்ட இவ்வாய்வில் முதலாம் நிலைத்தரவாக இலங்கை தென்கிழக்குப்
பல்கலைக்கழக இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழி பீட மூன்றாம் வருட விடுதி
மாணவிகளிடம் இருந்து வினாக்கொத்துகள் Google forms ஊடாகப் பெறப்பட்டு MS Excel
2019 ஊடாக பகுப்பாய்வு செய்யப்பட்டன. அதன் கோட்பாட்டு அமைப்பைப் பெற இஸ்லாமிய
மூல மற்றும் செந்நெறிகால இஸ்லாமிய இலக்கியங்கள், தலைப்புடன் தொடர்புபட்ட ஆய்வுக்
கட்டுரைகள், நூல்கள் மற்றும் இணையத்தள தகவல்கள் போன்ற இரண்டாம் நிலைத்தரவுகள்
வாசிப்புக்கு உட்படுத்தப்பட்டன. பெறப்பட்ட தகவல்கள் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டு
விபரிப்பு முறையில் முடிவுகள் முன்வைக்கப்பட்டன. ஆய்வின் முடிவில் இஸ்லாம் பெண்கள்
விளையாட்டில் ஈடுபடுவதை அனுமதித்திருப்பதும் குறித்த பெண்கள் விளையாட்டில் ஆர்வம்
கொண்டிருந்தும் பல்கலைக்கழக நுழைவின் பின்னர், சமய உளவியல், சமூக, கல்வி மற்றும்
பௌதீகம் சார்ந்த பல்வேறு காரணிகளின் விளைவாக குறைவாகவே விளையாட்டில் ஈடுபாடு
காட்டுகின்றமையும் கண்டறியப்பட்டது. பல்கலைக்கழக முஸ்லிம் மாணவிகளின்
விளையாட்டுடனான ஈடுபாடு மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் சவால்களை இனங்கண்டு,
அவற்றுக்கான முறையான தீர்வுகள் முன்வைக்கப்பட இவ்வாய்வு உறுதுணையாக
அமையவல்லது.