Abstract:
உலகமானது நவீன போக்கை நோக்கி நகரும் தற்காலத்தில் பழமையான நம்பிக்கைகள் மக்களின்
வாழ்வியலை பெரிதும் சவாலாக்க கூடிய ஒரு விடயமாக அமையப் பெறுகின்றது. குறிப்பாக இன்றைய
காலத்தில் கிராம புறத்தில் இப்பழமையான சிந்தனையின் தாக்கம் எதிர்கால சமூகத்தை முன்னோக்கி செயற்பட முடியாமல் முடக்கும் ஒரு தடைக் கல்லாக அமைகிறது. பிரதானமாக யாழ்ப்பாண பிரதேசத்தை பொறுத்தவரை
கலாசாரத்தின் உறைவிடமாகவும், பழமையான விடயத்தின் பொக்கிசமான ஒரு இடமாக காணப்படுகிறது. இதன்
காரணமாக அங்குள்ள பெரியவர்கள் மட்டுமில்லாமல் இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் என பல்வேறு வயதுப்
பிரிவினர் இப்பழமையான நம்பிக்கைக்கு உள்ளாகி உள்ளனர். இவை இவ்வாறு தொடர்ச்சியாக
கடத்தப்படுமாயின் இன்றைய சமூகம் மட்டுமில்லாமல் எதிர்கால சமூகமும் பழமையான நம்பிக்கைகள் கொண்ட
ஒரு சமூகமாக மாற்றமடையும் சவால் காணப்படுகிறது. எனவே இந்த பழமையான நம்பிக்கை இன்றைய
காலத்தில் ஏற்படுத்தும் விளைவை கண்டறியும் பொருட்டு “ பாரம்பரிய நம்பிக்கைகள் இன்றைய சமூகத்தில்
ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள்” என்ற தலைப்பில் மானிப்பாய்- சங்குவெளி பிரதேசத்தை அடிப்படையாகக்
கொண்டு இந்த சமூகவியல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாய்விற்கு முதலாம் நிலைத் தரவுகளை
சேகரிப்பதற்காக நோக்க மாதிரியின் அடிப்படையில் 78 பேர் தெரிவுச் செய்யப்பட்டு அவர்களுக்கு வினாக
கொத்து மூலம் தரவுகள் பெறப்பட்டன. அத்துடன் பல்வேறு வயது அடிப்படையில் பால் அடிப்படையிலும்
நேர்காணல் பங்குப்பற்றல் அவதானம் மற்றும் இலக்கு குழு கலந்துரையாடல் என்பன மேற்கொள்ளப்பட்டன. அத்துடன் இரண்டாம் நிலைத் தரவுகளாக நூல்கள், இணையத்தள கட்டுரைகள் மற்றும் புலமையாளரின்
ஆக்கங்கள் மூலமும் தகவல்கள் பெறப்பட்டன. இவ்வாய்வின் மூலம் கண்டறியப்பட்ட பிரதான விடயங்களாக
வாய்ப்புகள் தவறவிடப்படுகின்றமை, பழமையை போற்றும் சமூகம் உருவாகுதல், சுய நம்பிக்கை இல்லாமல்
போகுதல் மற்றும் எதிர் மறையான மனநிலை உண்டாகுதல் போன்ற தாக்கத்தினை ஏற்படுத்தி உள்ளது.
இதற்காக அரசோ, சமூக அமைப்புகளோ விழிப்புணர்வை ஏற்படுத்துதல், விஞ்ஞானப் பூர்வமான விளக்கத்தை
புரிய வைத்தல், பழமையான நம்பிக்கை என்ற பெயரில் ஏற்படும் குற்றங்களுக்கு கடுமையான தண்டணை
விதித்தல் இளைஞர்களை சமூக விடயத்தில் அதிகம் பங்கு கொள்ளும் வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்தல்
மற்றும் ஒரு விடயத்தை பகுப்பாய்வு செய்யும் ஆற்றலை அதிகரிக்கச் செய்தல் போன்ற பரிந்துரைகள் இறுதியில்
முன்வைக்கப்பட்டுள்ளன.