dc.description.abstract |
கிழக்கிலங்கையின் இலக்கிய மரபு தொன்மையும் நீட்சியும் கொண்டது. மிகப்
பிரசித்திபெற்ற வாய்மொழி இலக்கியப் பாரம்பரியம் தொடக்கம் நவீன இலக்கியங்கள்
வரை இங்கு பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. கவிதை, சிறுகதை, நாவல்,
திறனாய்வு என்று விரியும் தளங்களில் இங்குள்ளவர்களின் பங்கும் பணியும் விதந்து
போற்றத்தக்கன. அவ்வகையில் கிழக்கிலங்கையின் சமகால நாவல்கள் குறித்த
பார்வையொன்றினை இவ்வாய்வுக் கட்டுரை முன்வைக்க முயற்சிக்கிறது. சமகாலம்
பற்றிய பிரக்ஞை இலங்கை சுதந்திரமடைந்ததன் பின்பு என்ற காலவரையறையை
கொண்டியங்கி வருவது பொதுவான மரபெனினும் ஆய்வின் விரிவஞ்சி இரண்டாயிரமாம்
ஆண்டுகளுக்கு பின்வந்த கிழக்கிலங்கையரின் நாவல்கள் குறித்துப் பேசுவது சாலப்
பொருத்தமுடையதாகும். ஏனைய நவீன இலக்கிய வடிவங்களான சிறுகதை, நவீன
கவிதை போலன்றி நாவல்கள் விரிவான பாடுபொருட்களைக் கொண்டமைந்து
காணப்படுகின்றன. அதேவேளை சிற்றிதழ்கள், நிறுவனங்கள் போன்றவற்றின் குறைவான
பங்களிப்புடன் வெளிவரும் இந்நாவல்கள் பெரும்பாலும் தனிமனித முயற்சிகளாகவே
அமைந்து காணப்படுகின்றன. இதனால் கிழக்கிலங்கை நாவல்கள் பல்வேறு
பொருட்கோடல்களோடு பல்வகைப் பாடுபொருட்களையும் வெளிப்படுத்துகின்றன.
இவ்வகையில் தற்காலத்தில் வெளிவந்த நாவல்கள் பலவும் பொருள், வடிவம் சார்ந்த
பிரக்ஞையுடன் ஆய்வுக்குட்படுத்தப்படுகின்றன. இந்நாவல்கள் வெளிவந்த காலத்தில்
அவைபற்றி வெளிவந்த கருத்துக்களும், நாவலாசிரியர்களின் நேர்காணல்கள்,
திறனாய்வுப் பார்வைகள் போன்றன இவ்வாய்வின் மூலங்களாக
எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. இரண்டாயிரமாம் ஆண்டிற்குப் பின்னரான நாவல்கள்
பெரும்பாலும் ஆய்வுக்குட்படுத்தப்படாத நிலையில் இந்நாவல்கள் கொண்டுள்ள
கருத்தியல் வெளிப்பாடு, வடிவம்சார் உத்திகள், பரிசோதனை முயற்சிகள் என்பன
ஆய்வுநோக்கில் மேற்கொள்ளப்படாமை இவ்வாய்வு எதிர்நோக்கிய ஆய்வுப்
பிரச்சினைகளாகும்.இவற்றை நிவர்த்திக்கும் வகையில் சமகாலத்தில் கிழக்கிலங்கையில்
தோன்றிய நாவல் இலக்கியங்கள் பற்றிய இப்பன்முக ஆய்வானது இப்பிரதேச நாவல்
இலக்கியத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி நிலை, பொருளில் ஏற்பட்டுள்ள மாற்றம்,
வடிவமாற்றம் என்பவற்றை நுணுக்கமாக பரிசீலிக்கிறது. |
en_US |