Abstract:
2019 ஏப்ரல் 21ஆம் திகதி ஈஸ்டர் தினத்தன்று இலங்கையின் தலைநகரான கொழும்பிலும்
கிழக்கில் முக்கிய நகரமாக விளங்கும் மட்டக்களப்பிலும் மிகவும் ஒருங்கிணைந்த
அடிப்படையிலும் திட்டமிடப்பட்ட அடிப்படையிலும் தற்கொலைத் தாக்குதல்கள்
மேற்கொள்ளப்பட்டன. இதற்கான காரணம் தொடர்பில் பல்வேறு கேள்விகளும்
சந்தேகங்களும் எழுந்துள்ளன. இலங்கை முஸ்லிம்களின் அரபுமயமாக்கலை இத்தாக்கு
தலுக்கான காரணமாக அடையாளப்படுத்தியுள்ளனர். இதுதவிர பல சமூக, அரசியல்
மற்றும் கலாசார காரணிகளும் குறிப்பிடப்படுகின்றன. யுத்தத்திற்கு பிந்திய இலங்கையின்
முக்கிய போக்குகளில் ஒன்றாக இஸ்லாமோபோபியா அடையாளப்படுத்தப்படுகின்றது.
தீவிர சிங்கள-பௌத்த குழுக்களினால் இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான
வன்முறைச் சம்பவங்கள் மற்றும் இஸ்லாமிய எதிர்ப்புவாத சொற்பிரயோகங்கள் என்பன
அரசியல் தரப்பினரின் மறைமுகமான ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
2012ஆம் ஆண்டு தம்புல்ல பள்ளிவாயல் மீதான தாக்குதல் முதல் முஸ்லிம் சமூகத்திற்கு
எதிரான பல உயர் வழக்குச் சம்பவங்கள் பதிவாகியிருந்த போதிலும் அவை தேசிய
ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் குறைந்தளவிலான கவனத்தையே பெற்றிருந்தன.
இக்காலப்பகுதியில் வெளிவந்த அறிக்கைகளின் பிரகாரம் சிறுபான்மை வழிபாட்டுத்
தலங்கள் மீது 65 தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன. இவை பொதுபலசேனா
என்ற தீவிர சிங்கள-பௌத்த அமைப்பினால் உருவாக்கப்பட்ட ஒருங்கிணைந்த வெறுப்புப்
பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகவே நோக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக 2014ஆம்
ஆண்டில் அலுத்கம, பேருவளை, தர்காநகர், தெஹிவளை போன்ற பகுதிகளில் முஸ்லிம்
வணிகத்தலங்கள் மீதான தாக்குதல்கள் நடாத்தப்பட்டன. இவற்றைத் தொடர்ந்தே
2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஈஸ்டர் தின குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்
பட்டன. இத்தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களாக தேசிய தௌஹீத் ஜமாஅத்
அமைப்பின் உறுப்பினர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதுடன் இஸ்லாமிய அரசு
அதற்கான பொறுப்பினையும் ஏற்றுக்கொண்டுள்ளது. தாக்குதல்களுடன் முஸ்லிம்களில்
சிறுபகுதியினர் தொடர்புபட்டிருப்பதன் காரணமாக தாக்குதல்களைத் தொடர்ந்து இலங்கை
முஸ்லிம்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர். அந்நெருக்கடிகளை
ஆராய்கின்ற வகையில் எழுதப்பட்டுள்ள இக்கட்டுரையானது ஈஸ்டர் தின தாக்குதல்கள்,
அதற்கான பின்னணி, கிறிஸ்தவ தேவாலயங்கள் இலக்குவைக்கபட்டதற்கான காரணங்கள்
என்பன தொடர்பிலும் ஆராய்கின்றது. இக்கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ள தரவுகள்
முன்னர் வெளியிடப்பட்ட பல்வேறு கட்டுரைகள் மற்றும் ஆவணங்களிலிருந்து
பெறப்பட்டவையாகும். .