Abstract:
ஆசியாவில் கோல் முறை: இலங்கையின் அரசியல் திட்டம் (1978) எனும் தலைப்பிலான நூல்,
பேராசிரியர் அல்பிரட் ஜெயரட்ணம் வில்சன் என்பவரினால் எழுதப்பட்டதாகும். 1980 இல் முதல்
பதிப்பினைப் பெற்ற இந்நூல், இலண்டன் மக்மில்லன் அச்சகத்தினரால் வெளியிடப்பட்டது. கனடாவின்
நியூ புரூன்ஸ்விக் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் வில்சன் கடமையாற்றிய போது அவரால்
எழுதப்பட்ட இந்நூல், இலங்கையின் 1978 ஆம் ஆண்டைய அரசியல் திட்டம் தொடர்பில் வெளிவந்த
முக்கிய புலமைசார் நூல்களில் ஒன்றாக மதிக்கப்படுகின்றது. பேராசிரியரின் ஆங்கிலப் புலமையினை
வெளிப்படுத்தும் விதத்தில் ஆங்கிலத்திலேயே வரையப்பட்டுள்ள இந்நூல், அது கொண்டிருக்கும்
உள்ளடக்கங்கள் மூலம் நூலாசிரியரது அரசியல் புலமையினை வெளிப்படுத்துகிறது. 218 பக்கங்களில்
வரையப்பட்டுள்ள இந்நூல், ஒன்பது பிரதான தலைப்புக்களின் கீழ் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
இந்நூல் கோல் முறையின் தோற்றம், சமூக - பொருளாதார அமைப்பினுடைய அரசியல், அரசியல்
திட்டத்தின் உருவாக்கம், நிறைவேற்று ஜனாதிபதி முறை, பிரதம மந்திரி, அமைச்சர்கள், பாராளுமன்றம்
மற்றும் விகிதாசாரப் பிரதிநிதித்துவம், அடிப்படைச் சுதந்திரங்கள் மற்றும் மொழி தொடர்பான
பிரச்சினை, நீதித்துறை மற்றும் பொதுச் சேவை என்பவற்றினை பிரதான தலைப்புக்களாகக்
கொண்டுள்ளது. நூலின் முக்கிய பகுதிகளை விபரண நோக்கில் பகுப்பாய்வுக்கு உட்படுத்தியுள்ள
நூலாசிரியர், முடிவுரைக்கு அடுத்ததாக நூற்களின் இறுதிப்பகுதியில் சேர்க்கப்படும் மேலதிக
இணைப்பினையும் தனது நூலில் உள்ளடக்கியுள்ளார். இப்பகுதியில் நூலாசிரியர்
ஜனாதிபதித்துவவாதம் தொடர்பிலான மீள் மதிப்பீடு ஒன்றினையும் மேற்கொண்டுள்ளார். தனது
ஆய்விற்குப் பயன்படுத்திய உசாத்துணைகளின் விபரமான பட்டியல் ஒன்றினையும் ஆசிரியர்
இந்நூலில் வழங்கியுள்ளார். நூலின் பின்னிணைப்பில் இலங்கையின் அரசியலில் அச்சமயம்
காணப்பட்ட பிரதான செயற்பாட்டாளர்களின் விபரம், இலங்கையின் 1978 ஆம் ஆண்டைய இரண்டாம்
குடியரசு அரசியல் திட்டம் தொடர்பாக நூலாசிரியர் எழுதிய கட்டுரை, இலங்கை ஜனநாயக சோசலிச
குடியரசின் அரசியல் திட்டத்தின் சில முக்கிய விடயங்கள் என்பன இணைக்கப்பட்டுள்ளன. இந்நூல்
குறித்த திறனாய்வினை பின்வருமாறு நோக்கலாம்.