Abstract:
தொழில்நுட்ப வளர்ச்சி இன்று துரிதமாக நடைபெற்று வருகிறன்து. இது உலகில் பல்துறைகளில்
பாரிய துணைப்பாத்திரம் ஏற்று அன்றாட செயற்பாடுகளில் இன்றியமையாத இடத்தை
எட்டியுள்ளது. இத்தொழில்நுட்ப மயப்படுத்தபட்ட உலகில் தொழில்நுட்ப விளையாட்டுக்கள்
பொழுதுபோக்கிற்காக வடிவமைக்கப்பட்டு பெரிதும் விருத்தியடைந்து வருகின்றன. இன்று
ஒருவர் விளையாடும் விளையாட்டுக்கள், பலர் விளையாடும் விளையாட்டுக்கள், மற்றும் பல
வகையான விளையாட்டுக்கள் உருவாகி வருகின்றன. இன்று தனிநபர் விருப்பத்திற்கு ஏற்ப
சண்டை விளையாட்டுக்கள், புதிர் விளையாட்டுக்கள், அலங்கார விளையாட்டுக்கள், பந்தய
விளையாட்டுக்கள் முதல் பாலியல் விளையாட்டுக்கள் வரையில் தொழில்நுட்ப விளையாட்டுத்
துறையில் தேர்வுசெய்து விளையாட முடியுமான அளவு பலவகையான விளையாட்டுக்கள்
நித்தமும் வெளியிடப்பட்டு வருகின்றன. இவ்விளையாட்டு நடத்தையானது ஒரு
பொழுதுபோக்காக கருதப்பட்ட போதிலும் இன்று உளவியல், சமூக, பொருளாதார, சமய
விவகாரங்களில் பாதகமான தாக்கத்தினை ஏற ;படுத்துவதற்கான சந்திப்பத்தினை
உள்ளடக்கியுள்ளது. இதற்கமைய குறித்த நடத்தையின் மூலம் ஏற்படும் உளவியல் பாதிப்பினை
தொழில்நுட்ப விளையாட்டுக் கோளாறு என அழைக்கப்படுகிறது. உலக சுகாதார
நிறுவனத்தினால் தாயாரிக்கப்படும் நோய்களுக்கும், நலக்கேடுகளுக்குமான அனைத்துலக
புள்ளியியல் வகைப்பாடின் 11ஆவது தொகுப்பில் தொழில்நுட்ப விளையாட்டுக் கோளாறு
என்பது ஒரு நோய் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனை அமெரிக்க
உளவியல் சங்கத்தின் மூலம் தாயாரிக்கப்படும் மனநல கோளாறுகளின் நோயறிதல் மற்றும்
புள்ளிவிவர கையேட்டின் 5ஆவது பதிப்பிலும் உள்ளடக்கப்பட்டுள்ளது. எனவே
இக்கோளாறிற்கான தகுந்த உளவளத்துணை இடையீடுகள் அவசியமாகின்றன.
உளவளத்துணைத் துறையில் பயன்படுத்தப்படும் சிகிச்சை முறைகளை இக்கோளாறினை குணப்படுத்துவதற்காக எவ்வழிமுறைகளின் மூலம் சாத்தியப்படுத்தலாம் என்பது
ஆய்வுக்குட்படுத்தவேண்டிய பகுதியாகும். அவற்றில் நடத்தை மாற்று உளக்குணமாக்கல்
வழிமுறையினைப் பயன்படுத்தி எவ்வாறான இடையீடுகளை குறித்த கோளாறினைக்
குணப்படுத்துவதற்காகப் பயன்படுத்தலாம் என்பதை இவ்வாய்வு கண்டறிய முயற்சிக்கிறது.
இவ்வாய்வில் நடத்தை மாற்று உளக்குணமாக்கல் அணுகுமுறையில் பயன்படுத்தும் நுட்பங்களை
எவ்வழிமுறையினூடாக தொழில்நுட்ப விளையாட்டுக் கோளாறினைக் குணப்படுத்துவதற்குப்
பயன்படுத்தலாம் என்பதைக் கண்டறிய முயற்சித்துள்ளதுடன் இந்நுட்பங்களைப் பகுப்பாய்வுக்கு
உட்படுத்தியும் உள்ளது. இவ்வாய்வில் நடத்தை மாற்றுக் கோட்பாட்டில் பயன்படுத்தும்
பிரதானமான நுட்பங்களை மதிப்பீடு செய்து இக்குறித்த கோளாரிற்கான சிகிச்சைக்கு
அந்நுட்பங்களின் வகிபங்கினை அளவிடுவதுடன் நடத்தை மாற்றுக் கோட்பாட்டினைப்
பயன்படுத்தி இக்கோளாறுடயை சேவைநாடிக்கு உளவளத்துணைச் சேவை வழங்குவதற்கான
பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.