Abstract:
தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக மாறிவரும் உலகில் குறிப்பிடத்தக்க ஒரு
எண்ணக்கருவாக இலத்திரனியல் அரசாங்கம் விளங்குகிறது. இலத்திரனியல்
அரசாங்கமானது சேவைகளையும் தகவல்களையும் மக்கள் இலகுவாக நுகர வழி
அமைப்பதுடன் பொதுத்துறை நிறுவனங்களின் வினைத்திறனான செயற்பாட்டிற்கும்
உதவிபுரிகின்றது. பொதுத்துறை நிறுவனம் என்ற வகையில் பிரதேச செயலகங்கள்
வினைத்திறன் மிக்கவையாக இயங்க வேண்டியது அவசியமாக உள்ளது. இதனால்
இலங்கை அரசாங்கம் ஒவ்வொரு பிரதேச செயலகத்தையும் ‘ds.gov.lk’ என்ற
ஆள்களப் பெயரின் கீழ் இணையப்பட்டியலில் இணைத்துள்ளது. இருப்பினும்
இந்நிறுவனங்களை முழுதளவில் இலத்திரனியல் மயப்படுத்த முடியாதுள்ளது. இந்த
அடிப்படையில், இவ்வாய்வானது கல்முனை (முஸ்லிம் பிரிவு) பிரதேச செயலகத்தை
மையப்படுத்தியதாக காணப்படுவதுடன் இப்பிரதேச செயலகத்தில் இலத்திரனியல்
அரசாங்க முறையை நடைமுறைப்படுத்துவதில் உள்ள வாய்ப்புக்களையும்
சவால்களையும் ஆராய்கின்றது. முதலாம் மற்றும் இரண்டாம் நிலை மூலாதாரங்களில்
இருந்து பெறப்பட்ட எண்ணளவான மற்றும் பண்பளவான தரவுகள் இவ் ஆய்விற்காகப்
பயன்படுத்தப்பட்டுள்ளதுடன் தரவுகளின் அடிப்படையில் விபரணப்பகுப்பாய்வு
செய்யப்பட்டுள்ளது. இவ்வாய்வில் இலத்திரனியல் அரசாங்கத்தினை கல்முனைப்
பிரதேச செயலகத்தில் நடைமுறைப்படுத்துவதற்குள்ள வாய்ப்புக்களும் சவால்களும்
கண்டுகொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் இவ்வாய்ப்புக்கள் ஒவ்வொன்றும் சவால்களுடன்
பின்னிப்பிணைந்துள்ளதனையும் இவ்வாறான காரணத்தினால் இங்கு இலத்திரனியல்
அரசாங்கத்தை முழுதளவில் நடைமுறைப்படுத்துவது சிரமமானதாகக் காணப்பட
வருகின்றது என்ற விடயத்தையும் இவ் ஆய்வு அடையாளம் கண்டுள்ளது.