Abstract:
சமுதாய சூழழை அடியொட்டி எழும் நவீன இலக்கியங்களை இஸ்லாமியத் தமிழ்
இலக்கியமாகக் கொள்ள முடியாது என பல ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இஸ்லாமியத்
தமிழ் இலக்கியம் என்றால் என்ன என்பதை ஆராய முன், இஸ்லாம் என்றால் என்ன
என்பதற்கான சரியான விளக்கம் அவசியம். இஸ்லாம் ஒரு பூரண வாழ்க்கைத் திட்டம்.
மனிதனின் பிறப்பு தொடக்கம் இறப்பு வரைக்குமான சகல விடயங்களுக்குமான
வழிகாட்டல்களை அது வழங்கியுள்ளது. அதனை இரு பெரும் பிரிவுகளுக்குள் அடக்க
முடியும். அதாவது, வணக்க வழிபாடுகளோடு தொடர்பான அம்சங்கள், சமூக
வாழ்க்கையோடு தொடர்பான அம்சங்கள். இஸ்லாமியத் தமிழ் இலக்கியமாகக்
கொள்ளப்படுகின்ற இலக்கியங்களில் வணக்க வழிபாடோடு தொடர்பான அம்சங்களும், சில
இஸ்லாமிய வரலாறு தொடர்பான அம்சங்கள், நபிகளார், இறை நேசர்களாகக்
கருதப்பட்டோர் முதலியோரின் புகழ் முதலிய விடயங்களே கருவாக அமைந்துள்ளன.
அவற்றை மாத்திரம் இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் எனக் கொண்டால் இஸ்லாமிய
இலக்கியத்தின் எல்லையும் குறுகியதாகவே அமையும். அதேவேளை, இஸ்லாம்
வழிகாட்டியுள்ள சமூக வாழ்வை முற்று முழுதாகப் புறக்கணித்ததாய் ஆகிவிடும். நவீன
இலக்கியங்கள் முஸ்லிம்களில் சமூக வாழ்க்கை பற்றிப் பேசுகின்றன. அதனால் அவற்றையும்
இஸ்லாமியத் தமிழ் இலக்கியமாகக் கொண்டால்தான் இஸ்லாமிய இலக்கியம் முழுமை
பெறும். நவீன இலக்கியங்களும் இஸ்லாமியத் தமிழ் இலக்கியமாகக் கொள்ளப்பட
வேண்டும் என்பதை போதிய ஆதாரங்களோடு நிறுவுவதே இவ்வாய்வின் நோக்கமாகும்.
இவ்வாய்வில் அல்குர்ஆன், நவீன இலக்கியங்கள் முதலியன முதலாம் நிலைத்தரவாகவும்
இவ்வாய்வு தொடர்பாக எழுதப்பட்ட கட்டுரைகள் இரண்டாம் நிலைத் தரவாகப்
பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும், சமூகவியல், ஒப்பீட்டு அணுகுமுறைகளும் இவ்வாய்வில்
பயன்படுத்தப்பட்டுள்ளன.