Abstract:
ஆளுமை பற்றிய உளவியல் கருத்துக்களை தமிழியல் சிந்தனையாளர்களை விடவும்
மேலைத்தேய சிந்தனையாளர்களே அதிகமாக விளக்கியுள்ளார்கள் என்ற கருத்து இன்று
மேலோங்கி உள்ளது. அதேபோல இன்னும் பலரும் பிரயோகிக்கும் சொல்லாகவுள்ளது.
தமிழியல் சிந்தனையாளர்கள் மேலைத்தேய சிந்தனையாளர்களுக்கு முன்னரே மனித
ஆளுமை சார்ந்த விடயத்தை விளக்கியுள்ளார்கள். குறிப்பாக, திருவள்ளுவரும்,
ஒளவையாரும் ஆளுமைபற்றிக் கூறியுள்ளார்கள். உலகில உயிரினம் தோன்றியது முதல்
உள்ளமும் அதனுடன் இணைந்த வகையில் பரிணாமவளர்ச்சி அடைந்தது. மனித இனம்
விலங்கு இனத்தை விட மேம்பட்ட இனமாகும். விஞ்ஞானமும் தொழிநுட்பமும் இன்று
வளர்ந்துள்ளது என்றால் அதற்கு முக்கிய காரணம் மனிதனேயாவான். மனிதன் அவனது
முயற்சியாலும் திறனாலும் பற்பல தொழிநுட்ப சாதனங்களை உருவாக்கி இருக்கிறான். இந்த
செயற்பாடுகள் அனைத்துக்கும் காரணம் தனிமனித ஆளுமைப் பண்பேயாகும். ஆளுமைப்
பண்பு ஒரு மனிதனை பிறரிடமிருந்து பிரித்துக்காட்டும் தனித்துவமானதாகும். நமது எண்ணம்,
உணர்ச்சிகள், பேச்சு, செயல்கள், மூலம் தான் ஆளுமைப் பண்பு வெளிப்படுகின்றது. தமது
சுற்றுச் சூழலுக்கும் சமூகத்திற்கும் ஏற்றபடி இணக்கமாக நடந்து கொள்வதையும்,
சமுதாயத்தில் தமக்குரிய மதிப்பினையும் தமது நல்வாழ்வினையும் ஆளுமைப் பண்பு
நிர்ணயிக்கிறது. ஒருவரது ஆளுமைப் பண்பினை நிர்ணயிக்கும் காரணிகளில் பாரம்பரியம்,
சூழுல், சமூகவியல், ஆத்மீகம், உளவியல் போன்ற பல காரணிகள் செல்வாக்கு
செலுத்துவதாக உளவியலாளர்கள் கூறினாலும் கூட திருவள்ளுவரும் ஓளவையாரும்
ஆளுமையை பற்றி எவ்வாறான கருத்துக்களைக் கொண்டிருந்தார்கள் என்பதை நோக்குவது
இவ்வாய்வாகும். இவ்வாய்வில் பகுப்பாய்வு முறை, விபரண ஆய்வு முறைகள்
பயன்படுத்தப்பட்டுள்ளன. திருக்குறள், ஆத்திசூடி ஆகிய மூல நூல்கள் முதலாம்
நிலைத்தரவுகளுக்காகவும் ஆந்நூல்கள் தொடர்பாக வெளிவந்த ஏனைய நூல்கள்,
கட்டுரைகள், சஞ்சிகைகள், இணையத்தளக்குறிப்புக்கள் என்பன இரண்டாம்
நிலைத்தரவுகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.