dc.description.abstract |
இலத்திரனியல் அரசாங்கம் நல்லாட்சி ஆகியவற்றின் தூரநோக்கு வேறுபட்டாலும், பல விடயங்களில் ஒன்றுடன் ஒன்று இரண்டு எண்ணக்கருக்களும் தொடர்புபட்டுள்ளன. நிர்வாகத்திறனை வளரத்தல், தரமான பொதுச்சேவையினை வழங்குதல், ஜனநாயகப் பங்குபற்றல், சட்டவாட்சி, வெளிப்படைத்தன்மை போன்றவைகள் இலத்திரனியல் அரசாங்கம், நல்லாட்சி ஆகிய இரண்டினதும் பிரதான கொள்கைகளாகும். சர்வதேசளவில் இலத்திரனியல் ஆட்சியூடாக நல்லாட்சியை விருத்திசெய்ய ஐக்கிய நாடுகள் சபை, உலகவங்கி போன்ற சர்வதேச அரசியல் நிறுவனங்கள் முயற்சி செய்கின்றன. தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தைப் பிரயோகித்து அரசாங்கம் தனது நிர்வாகத்தைச் செயல்படுத்தும் போது இலத்திரனியல் ஆட்சி உருவாகின்றது. இலகுபடுத்தல், நெறிமுறை, பொறுப்பெடுத்தல், பொறுப்புக்கூறுதல், வெளிப்படையாக இருத்தல் போன்ற நல்லாட்சிப்பண்புகளுக்கு மக்கள், நிர்வாகிகள், ஆட்சியாளர்கள் தனியார்துறை போன்றவர்கள் பழக்கப்படுவதற்கும், அதற்கூடாக இடையூடாடுவதற்குமான தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம் சந்தர்ப்பத்தை வழங்குகின்றது. சிறந்த ஆட்சியை திறனுடனும், செயலூக்கத்துடனும் மேற்கொள்வதற்கான பொறிமுறையினை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் உருவாக்குகின்றது. வெளிப்படையாக இருத்தல் என்பது திறந்த அரசாங்கத்திற்கான ஆரம்பமாகும். இதற்கு தகவலறியும் சுதந்திரம் அரசுகளில் இருக்க வேண்டும். இதற்கு மக்களை மையப்படுத்திய ஆட்சிக்கான தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப வலைப்பின்னலை உருவாக்க வேண்டும். வலுவான மக்கள் மைய ஆட்சியை உருவாக்க முடியும் என்பதை இணையப் புரட்சி நிரூபித்துள்ளது. மரபுசார்ந்த பொதுநிர்வாகச் செயற்பாடுகளுக்கு பாரிய பௌதீகக் கட்டமைப்பு தேவையாகும். நேருக்கு நேர் மக்களை நிர்வாகம் செய்வதற்குப் பௌதீக கட்டமைப்பு வசதிகள் பாரியளவில் தேவையானதாகும். இப்போது சேவை வழங்குனரும் சேவையினைப் பெறுபவரும் ஒருவரை ஒருவர் நேரக்கு நேர் சந்திக்காமல் செலவு குறைந்த வழியில் சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கான சாத்தியங்கள் உருவாகியுள்ளன. இக்கட்டுரை பல்வேறுபட்ட இலத்திரனியல் அரசாங்க வகைகளையும் அதன் செயற்பாடுகளையும் ஆராய்கிறது. இலத்திரனியல் அரசாங்கம் மற்றும் ஆட்சி தொடர்பான பல்வேறு இணையத்தளங்கள் இதற்கு உதவுகின்றன. மேலும் மரபு ரீதியான பொதுநிர்வாக கட்டமைப்புக்களை இலத்திரனியல் ஆட்சியுடன் இணைப்பதனால் ஏற்படும் நன்மைகளையும் இக்கட்டுரை ஆராய்கிறது |
en_US |