Abstract:
கிழக்கிலங்கையில் மருதமுனைக் கிராமத்தைச் சேர்ந்த இமாம் அத்னான் (1990)
சமகால இலக்கிய வெளியில் தனது படைப்புகளினூடாக வாசகரிடையே
இடைவினையாக்கத்தைப் புரிந்து வரும் கவனிக்கத்தக்க ஒரு படைப்பாளி. இவர்
இலக்கியப் பிரதிகள் கதையாடும் அரசியல் அவை கொண்டிருக்கும் வன்முறைகள்
குறித்த நுண் அவதானங்களை நூல்கள், இணையதளம் மற்றும் இலக்கியக் கலந்துரையாடல்கள் என்பவற்றின் மூலம் விமர்சனங்களாக முன்வைத்து வருபவர். ‘மொழியின் மீது சத்தியமாக’ (கவிதைத் தொகுதி - 2017) மற்றும் ‘மந்திரிக்கப்பட்ட சொற்கள்’ (குறும்புனைவுகளின் தொகுதி - 2018) ஆகியன இவரது முக்கியமான
படைப்பாக்கங்களாகும். தமிழ் இலக்கியப் பரப்பில் மையம் கொண்டிருக்கும்
யதார்த்தவியலை இடையீடு செய்தல், புனைவின் புதுவகைச் சாத்தியங்களை
நிகழ்த்துதல், நுண்கதையாடல்கள் மீது கரிசனை கொள்ளல் போன்றன இவரது
பிரதிகளுக்குள் அதிகம் இடம்பெறுகின்றன. உருவ உள்ளடக்க நிலையில் பொதுப் போக்கிற்குள் நுழைய மறுக்கும் பல பிரதிகளைக் கொண்ட இவரது படைப்புக்கள்
இலக்கிய ஆய்வுப் பரப்பினுள் நுழைக்கப்படவேண்டியவையும், நுணுகி ஆராயப்பட
வேண்டியவையுமாகும். அந்த வகையில், அத்னானின் கவிதைகளில் வெளிப்படும் பின்-
நவீன இலக்கியக் கூறுகளை ஆராய்வதாக இவ்வாய்வு அமைகின்றது. பண்பு ரீதியான
அளவீடுகளைக் கொண்ட இந்த ஆய்வில் ‘மொழியின் மீது சத்தியமாக’ (2017)
கவிதைத் தொகுதி பிரதான தரவு மூலமாகவும், குறித்த தொகுதியில் உள்ள
கவிதைகளை வாசிப்புச் செய்வதற்காக உருவவியல் அணுகுமுறையும்
பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆய்வின் முடிவில் அத்னானின் கவிதைகளில் ஊடிழைப்
பிரதியினை அடிப்படையாகக் கொண்ட எடுத்துரைப்பு வடிவம் (தமிழ் மொழி மூல
அல்குர்ஆனிய எடுத்துரைப்பு, விளம்பரப்படுத்தல், வானொலி நிகழ்ச்சித் தொகுப்பு),
புனைவுச் சம்பவம், பரிச்சய நீக்கம், பிரதிக்குள் உருவாக்கப்படும் வாசகருக்கான
செயல்தளம், யதார்த்தம் மற்றும் புனைவுகளுக்கிடையிலான எல்லைக் கோடு
சிதைக்கப்படுதல் போன்ற சில பின்-நவீன இலக்கியக் கூறுகளை அடையாளம் காண
முடிந்தது.