Abstract:
தூதுவிடு காவியங்கள் அனைத்து மொழிகளுக்கும் பொதுவான ஒரு சிற்றிலக்கிய
வகையாக இருக்கின்றது. விஜய நகர நாயக மன்னர்கள் தமிழ் நாட்டை ஆட்சி செய்த
காலத்தில் அதிகமான தூதுவிடு காவியங்கள் தமிழ் மொழியில் எழுதப்பட்டன. சிங்கள
மொழியில் காணப்படும் அதிகமான தூதுவிடு காவியங்கள் கம்பளை யுகத்திலும்
கோட்டை யுகத்திலும் தோன்றியனவாகும். சிங்கள இலக்கியத்திலே தூதுவிடு காவிய
வகைக்கு தமிழ் மொழியை விட விஷேடமான ஓர் இடம் இருக்கின்றது. சிங்கள
இலக்கியத்தில் தோன்றிய முதலாவது தூதுவிடு காவியமாக திசரசந்தேஷய
கருதப்படுகின்றது.கோட்டை யுகத்தில் தோன்றிய அதிகமான தூதுவிடு காவியங்கள்
கோட்டை இராசதானியின் தலைநகராக காணப்பட்ட ஜயவர்தனபுர நகரை
வர்ணிக்கின்றன. ஏனென்றால் தூதைக் கொண்டு செல்லும் பறவைகளின் பயணம்
முதலாவது ஜயவர்தனபுர நகரத்திலிருந்தே ஆரம்பிக்கின்றது. கிராசந் தேஷயக்
காவியமும் கோட்டை யுகத்தில் தோன்றிய ஒரு தூதுவிடு காவியமாக உள்ளது. ‘கிரவா’
என்பது சிங்கள மொழியில் கிளியைக் குறிக்கும். இந்தக் காவியத்தில் தூதை எடுத்துச் செல்லும் பறவையாக கிளி இருக்கின்றது. ‘சந்தேஷய’ என்பது செய்தியைக் குறிக்கும்.
எனவே இந்தக் காவியம் கிரா சந்தேஷய என்று அழைக்கப்படுகின்து. இதில் தலை
நகரிலிருந்து தொடகமுவ விஜயபா பிரிவெனாவின் முதல்வர் ஸ்ரீ ராகுல தேரருக்கு
செய்தி எடுத்துச் செல்லப்படுகின்றது. இந்தக் காவியத்திலும் ஜயவர்தனபுர நகரம்
தொடர்பான வருணனைகள் உள்ளன. அவற்றில் சில வருணனைகள்
யதார்தமானவையாகவும் சில வருணனைகள் கற்பனையாகவும் உள்ளன. கிரா
சந்தேஷக் காவியத்தில் ஜயவர்தனபுர நகரம் எவ்வாறு வர்ணிக்கப்பட்டுள்ளது என்று
தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துவதே இந்த ஆய்வின் நோக்கமாகும். எனவே
கிராசந்தேஷயக் காவியத்தில் காணப்படும் இருநூற்றைம்பத்து நான்கு பாடல்களும்
விவரண அணுகுமுறையில் பகுப்பாய்வு செய்யப்பட்டு முடிவுகள் பெறப்பட்டன. இதில்
ஜயவர்தனபுர நகரத்தில் உள்ள அரண்மனைகள், நகரத்தில் வாழுகின்ற பெண்கள்,
நகரத்தில் வாழுகின்ற இளைஞர்களின் இயல்புகள், நகரத்தின் தன்மை, நகரத்தின்
பாதுகாப்பு என்பன பற்றிய செய்திகள் சொல்லப்பட்டுள்ளன. அவ்வகையில் நகரத்தின்
வளம், அரண்மனைகள், மக்கள், பாதுகாப்பு, சமயம் என்ற கூறுகளின் அடிப்படையில்
ஜயவர்தனபுர நகரம் எவ்வாறு வர்ணிக்கப்பட்டுள்ளது என்று இந்த ஆய்வுக்கட்டுரை
விளக்குகின்றது. இந்த ஆய்வுக்கான முதலாம் நிலைத் தரவாக கே. ஜீ. பிரேமரத்னவால
பதிப்பிக்கப்பட்ட ගිරා සන්දේශය என்கின்ற நூல் கொள்ளப்பட்டது. இரண்டாம் நிலைத்
தரவாக கிரா சந்தேஷக் காவியம் தொடர்பாக சிங்கள மொழியில் எழுதப்பட்ட
இணையத்தளக் கட்டுரைகள் பயன்படுத்தப்பட்டன. இந்தத் தரவுகள் பகுப்பாய்வு
செய்யப்பட்டு முடிவுகள் பெறப்பட்டன.