Abstract:
இன்று சமகால ஓவியம் எனும் போக்கானது கலைகளின் அடையாளங்களை
மறுத்து ஒற்றைத் தன்மையினை வலியுறுத்தி உலகளாவிய பொதுத் தன்மைக்குள்
கொண்டுவருவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இது கலையினை ஒரு
சாதாரண உற்பத்திப் பண்டமாக உருவாக்கி அதனை ஒரு சந்தைப்
பொருளாக்குகின்ற நடவடிக்கையாகும். கலையினை சந்தைப்பொருளாக்குகின்ற
இவ்வாறான நடவடிக்கைகள் உலகமயமாக்கலின் ஒரு போக்காகும். 'தமிழ்
ஓவியம்” என்பது ஓர் அடையாளம் சார்ந்த எண்ணக்கருவாகும். இங்கு நாம்
அடையாளம் குறித்துப் பேசுவது என்பது இந்த சந்தை மையவாத்தினைக் கடந்து
அரசியல், பொருளாதாரம், பண்பாடு, வரலாறு, கருத்தியல் போன்ற பல்வேறுபட்ட
காரணிகள் தமிழ் சமூகத்தில் எவ்வாறு செல்வாக்குச் செலுத்தி வந்துள்ளன
என்பதையும் அதனால் தமிழ் சமூகத்தில் ஏற்பட்ட மாற்றங்களையும்
ஓவியத்தினூடாகப் புரிந்து கொள்கின்ற ஒரு முயற்சியாகும். மேலும்
உலகமயமாக்கத்தின் ஒற்றைத் தன்மைக்கு எதிராக அடையாளங்களை
முன்னிறுத்துகின்ற ஒரு செயற்பாடுமாகும். இந்தவகையில் இவ்வாய்வானது தமிழர்
பண்பாட்டில் வரலாற்றுக்காலம் முதல் ஓவியம் எவ்வாறு இருந்தது என்பதையும்
அது சமூக மாற்றத்தின் காரணமாக என்ன நிலைக்குச் சென்றது என்பதையும்
வெளிப்படுத்துவதுடன், இன்றைய நிலையின் அதன் பயில்வு தொடர்பாகவும்
எதிர்காலத்தில் தமிழ் ஓவியத்தினை எவ்வாறு கட்டியெழுப்பலாம் என்பது
தொடர்பான கருத்தினையும் முன்வைக்கின்றது. இவ்வாய்வுக்கு தமிழர்களின்
ஆரம்பகால இலக்கியங்களான எட்டுத் தொகை பத்துப்பாட்டு நூல்களும் பல்லவ,
சோழ. நாயக்கர் கால ஓவியங்களும் மூலாதாரங்களாக எடுத்துக் கொள்ளப்பட்டன.
இரண்டாந்தரத் தகவல்களாக அறிஞர்களின் நூல்கள், கட்டுரைகள், என்பனவும்
கலைஞர்களின் ஓவியங்களும் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.