Abstract:
பெண்மையை போற்றும் நெறிகளில் இந்துசமயம் தனித்துவமானது. இந்துமத மூல
நூல்கள் இக்கருத்தினை தெளிவுபட எடுத்துக்காட்டுகின்றன. இவற்றுள் தமிழ் மூல
நூல்களில் ஒன்றான தேவாரத் திருப்பதிகங்கள் பக்தியை மையப் பொருளாக
கொள்கின்ற போதிலும் பெண்மையைப் போற்றி அதனூடாக பால்சமத்துவத்தை
வெளிப்படுத்துகின்றன. தேவாரத்திருப்பதிகங்களில் பால்சமத்துவத்தை அதிகம்
வலியுறுத்துவதாக திருநாவுக்கரசரின் திருப்பதிகங்கள் காணப்படுகின்றன.
பல்லவர்கால பக்தியிலக்கியங்களில் அப்பர் சுவாமிகளின் தேவாரங்கள் முதன்மை
பெறுகின்றன. அப்பர் சுவாமிகள் வாழ்ந்த காலச்சூழல் தமிழ் நாட்டை சமண சமயம்
செல்வாக்கு செலுத்திய காலமாகும். அறத்தினை அடிப்படைச் சிந்தனையாகக்
கொண்டு தமிழகத்தில் காலூன்றியவர்கள் சமணர்கள். இதற்கு மாற்றீடாகவும்
இதனை வெல்லும் வகையிலும் வைதிக போராளிகளால் கொண்டு வரப்பட்ட
உணர்ச்சியே பக்தியாகும். அப்பர் சுவாமிகளும் தனது பாடல்களில் பக்தியை
ஆழமாக வெளிப்படுத்தியிருக்கின்றார். இதைத் தவிர சமணர்களின் கொள்கைகளை
பலவீனமடையச் செய்ய பல உத்திகளையும் அப்பர் சுவாமிகள் கையாண்டார்.
சமணர்கள் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. பெண்ணாகப்
பிறந்தவர்களுக்கு முத்தியில்லை என்று கூறுபவர்கள். இக்கருத்துக்கள் பெண்கள்
மத்தியில் விமர்சனத்திற்குட்பட்டிருந்த வேளையில் அப்பர் சுவாமிகள் பெண்களுக்கு
முக்கியத்துவம் கொடுத்து தன் பாடல்களில் கருத்துக்களை வெளியிட்டதோடு
அதற்கு மேல் ஒரு படி சென்று பால் சமத்துவம் பற்றியும் பாடியிருந்தார். அவற்றை
அடையாளப்படுத்திக் காட்டுவதே இவ்வாய்வின் நோக்கமாகும். பக்தி உணர்ச்சி
வெளிப்பாடுகளுக்கு மத்தியில் பால் சமத்துவத்தை அப்பர் சுவாமிகள் பேச
வேண்டிய காரணங்கள் என்ன என்பது ஆய்வின் பிரச்சினையாக உள்ளது. அப்பர்
சுவாமிகளின் தேவாரங்கள் ஆய்வின் முதனிலைத் தரவுகளாக கொள்ளப்படுகின்ற
அதேவேளை அப்பர் சுவாமிகளின் தேவாரம் மற்றும் பால் சமத்துவம் தொடர்பாக
வெளிவந்த நூல்கள், கட்டுரைகள் என்பன இரண்டாம் நிலைத் தரவுகளாக
கொள்ளப்படுகின்றன. இவற்றினூடாக, அப்பர் சுவாமிகள் பக்தியை சமணர்களை
வெல்ல எடுத்த ஆயுமாக பயன் படுத்தியதோடு அவர்களின் கொள்கைகளை
நுணுக்கமாக பலவீனப்படுத்த பெண்ணியல் வாதத்தினையும் கையில்
எடுத்திருக்கின்றார் என்பதை ஆய்வின் முடிவாகவும் உள்ளது.