Abstract:
உலகளாவிய ரீதியில் மக்களை அண்மைக்காலமாக அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு
நோயாகCovid- 19 எனும் தொற்றுநோய் காணப்படுகின்றது. சீனாவின் வுஹான்
நகரில் முதலில் இனங்காணப்பட்ட இந்நோயானது தற்போது உலகிலுள்ள
பெரும்பாலான நாடுகளில் பரவலாக்கமடைந்துள்ளது. இந்தவகையில் இலங்கையிலும்
மார்ச் 11ஆம் திகதி கொரோனா தொற்று நோயாளி ஒருவரை இனங்கண்டதோடு
இதிலிருந்து மக்களை பாதுகாக்கும் நோக்கில் இலங்கை அரசாங்கம் நாடளாவிய
ரீதியில் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தியது. இதனால் அனைத்து
பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டு பட்டதாரி மாணவர்களது கல்வி நடவடிக்கைகளும்
இடைநிறுத்தப்பட்டது. இந்நிலையில் மாணவர்களது கல்வி நடவடிக்கைகளை
முறைப்படுத்த நிகழ்நிலை மூலமான கற்பித்தல் செயன்முறைகள் இலங்கையிலுள்ள
அனைத்து பல்கலைக்கழகங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்நிலையில்
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்திலுள்ள இஸ்லாமிய கற்கைகள் மற்றும்
அரபுமொழிப் பீடத்தைச் சேர்ந்த இரண்டாம் வருட மாணவர்கள் தங்களது நிகழ்நிலை
மூலமான கற்றல் நடவடிக்கைகளில் பல்வேறுபட்ட சவால்களை எதிர்கொண்டனர்.
இவ்வாறான சவால்களை அடையாளப்படுத்தி இனிவருகின்ற காலங்களிலும் இவ்வாறான
பிரச்சினைகளை எதிர்நோக்காத வகையில் கல்வி நடவடிக்கைகளை
முன்னெடுப்பதற்கான வினைத்திறனான ஆலோசனைகளையும் முன்வைப்பதை
நோக்கமாகக் கொண்டு இவ்ஆய்வினை மேற்கொள்வதற்காக முதலாம், இரண்டாம்
நிலைத்தரவுகளினூடாக தரவுகள் சேகரிக்கப்பட்டன. முதலாம் நிலைத்தரவுகளாக
வினாக்கொத்து, நேர்காணல் ஆகிய முறைகளும் இரண்டாம் நிலைத்தரவுகளாக
இணையத்தரவுகள், இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபுமொழிபீடத்திலுள்ள
மாணவர்கள் தொடர்பிலான அறிக்கைகள் என்பனவும் பயன்படுத்தப்பட்டன.
இவ்வாய்வின் இறுதியாக கண்டுகொள்ளப்பட்ட விடயமெனில் இஸ்லாமிய கற்கைகள்
மற்றும் அரபுமொழி பீடத்திலுள்ள இரண்டாம் வருட மாணவர்களில் எவ்வளவு
வீதத்திலான மாணவர்கள் எந்தவகையான பிரச்சினைகளை எதிர்கொண்டனர் என்பதை
அடையாளப்படுத்தியதோடு அதற்கான தீர்வுகளும் முன்வைக்கப்பட்டன.