Abstract:
கல்வித் துறையில் காணப்படுகின்ற சரியான அணுகுமுறைகள், சட்டங்கள் முறையாக
அமுல்படுத்தப்படுமாக இருந்தால் அந்தச் சமூகம் முன்னேற்றம் அடைந்த சமூகமாக
தன்னை மாற்றிக்கொள்ளும். இன்று கோவிட்-19 தொற்று ஏற்படுத்திய சமூக
இடைவெளியால் உலகம் முழுவதும் 154 கோடி மாணவ, மாணவிகள் கல்வியில்
பாதிக்கப்பட்டுள்ளதாக யுனெஸ்கோ அமைப்பு தெரிவித்துள்ளது. எமது நாட்டில் கோவிட்-
19 தொற்றுக்காலத்தில் உயர்தர மாணவர்களுக்கு இணையத்தின் மூலம் கற்பித்தல்
செயற்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டது. இணையத்தின் ஊடாக கற்றல் செயற்பாட்டை
மேற்கொள்ளும் போது உயர்தர மாணவர்கள் எவ்வாறான பிரச்சினைகளை
எதிர்கொள்கின்றனர், என்பதை ஆராய்வதே இவ்வாய்வின் நோக்கமாகும். முதல் நிலை
மற்றும் இரண்டாம் நிலை தரவுகள் இவ்வாய்வில் பயன்படுத்தப்பட்டுள்ளன. நோக்க
மாதிரி அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட உயர்தர வகுப்பு மாணவர்கள்; 68 பேரிடம்
வினாக்கொத்துகள் வழங்கப்பட்டன. இவற்றோடு அதிபர், பகுதித் தலைவர்
ஆகியோரிடம் நேர்காணல் மூலம் தரவுகள் பெற்றுக் கொள்ளப்பட்டன. தரவுகள்
ஆய்வாளர்களால் பகுப்பாய்வு செய்யப்பட்டு முடிவுகள் பெறப்பட்டன. பகுப்பாய்விற்காக
Google form, Excel என்பன பயன்படுத்தப்பட்டன. இணையவழி கற்றலின் பயனாக
மாணவர்கள் கல்வியில் தொடர்பற்று பெரும் இடைவெளியை சந்திக்காமல் கற்றல்
செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த போதிலும் வசதி குறைந்த, சுகாதார பிரச்சினையுள்ள
மாணவர்கள் பெரும் பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளனர். மேலும், வகுப்பறைக்
கற்றலுக்கும் இணையவழி கற்றலுக்கும் இடையில் வேறு பாட்டினையும், இணையத்தில்
கற்றதில் போதிய தெளிவின்மை, இணையவசதியின்மை, தொழிநுட்ப சாதனங்களை
பெற்றுக் கொள்வதில் போதிய வசதியின்மை போன்ற பிரச்சினைகளையும் மாணவர்கள்
எதிர்நோக்கியுள்ளனர்.