Abstract:
கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களுக்கு கிடைக்கக்கூடிய பாரம்பரிய மருத்துவ
முறையாக பாரம்பரிய மருத்துவம் பயன்படுத்தப்படுகின்றது. உலகின் அனைத்து
மதங்களும் பாரம்பரிய மற்றும் மூலிகை மருத்துவத்துறைக்கு பங்காற்றுகின்றன. நவீன
மருத்துவத்தின் செல்வாக்கிற்கு முன்னரான காலப்பகுதியில் பாரம்பரிய மற்றும் மூலிகை
மருத்துவத்துறையின் செல்வாக்கே அதிகம் காணப்பட்டது. அந்தவகையில் இஸ்லாம்
மதமும் ஆய்வுத்துறைக்கு தூண்டுதலும் முக்கியத்துவமும் அளித்துள்ளமையால்
வைத்தியத் துறையில் முஸ்லிம்கள் அதீத ஈடுபாடும் ஆர்வமும் காட்டினர்.
இந்தவகையில் இவ்வாய்வு ஓட்டமாவடி பிரதேச முஸ்லிம்களின் வைத்திய முறைகள்
இன்று வரை அவர்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமையையும், அவ்வைத்திய
முறைகள் அவர்களுக்கு மத்தியில் உயிரோட்டம் உடையதாக இன்றும் செல்வாக்குப்
பெற்று இருப்பதனை எடுத்துக் காட்டுகின்றது. இன்றைய காலகட்டத்தில் நவீன மருத்துவ
துறையின் வளர்ச்சி புது விதமான தொழில்நுட்ப வடிவில் நோய்களை தீர்க்கும்
வகையில் காணப்படுவதனால் மக்கள் மத்தியில் பாரம்பரிய மருத்துவமுறையில்
செல்வாக்கு படிப்படியாகக் குறைந்து நவீன மருத்துவமுறையின் பால் ஈர்ப்பு அதிகரித்து
காணப்படுகின்றது. மேலும் இவ்வைத்தியமுறையை இன்றைய தலைமுறையினர்
கற்பதற்கான ஆர்வம் குறைந்து வருகின்றது. இதன் காரணமாக பாரம்பரிய வைத்திய
முறைகள் சில முஸ்லிம்களால் கைவிடப்பட்டுள்ளதோடு அவற்றின் தேவைகளும்,
பயன்பாடுகளும் இப்பிரதேசத்தில் அருகி வருகின்றன. இவ்வாய்வுக் கட்டுரையானது
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேசத்தின் பாரம்பரிய மருத்துவத்தின்
போக்குகள் மற்றும் சவால்களை ஆராய்வதோடு நவீன மருத்துவ துறையின் அதிகரித்த
செல்வாக்கினால் இவ்வாய்வுப்பிரதேச பாரம்பரிய மருத்துவத்திற்கான தேவையை
எடுத்துக்காட்ட வேண்டிய தேவையும் காணப்படுகின்றது. மேலும் பாரம்பரியம் மற்றும்
மூலிகை மருத்துவத்துறையிலான தற்போதைய அவநம்பிக்கையை குறைப்பதற்கும்,
நோக்கத்தை அடைவதற்கும், இதனைக் கருத்திற் கொண்டு ஓட்டமாவடி பிரதேசத்தின்
பாரம்பரிய முஸ்லிம் மருத்துவர்களையும் அவர்களின் வைத்திய நுட்ப முறைகளை
இனங்காணுதலும் இப்பிரதேசத்தில் வைத்திய முறைகள் அருகி வருகின்றமைக்கான
தகுந்த காரணங்களை கண்டறிதலும் இவ்வைத்திய முறையை தொடர்ந்து
இப்பிரதேசத்தில் பேணுவதற்கான ஆலோசனைகளை வழங்குதல், எதிர்காலத்தில்
இவ்வைத்திய துறையில் முஸ்லிம்களையும் எதிர்கால சந்ததியினரையும் ஈடுபாடு
கொள்ளச் செய்தல் போன்ற நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு ஆய்வுப்
பிரதேசத்தில் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாய்வினை ஓட்டமாவடி
பிரதேசத்தில் மேற்கொள்வதற்காக, முதலாம் இரண்டாம் நிலைத்தரவுகள்
பயன்படுத்தப்பட்டு அதற்கான தீர்வுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.