Abstract:
போதைப் பாவனை மனிதனின் புத்தி, உடல் நலம், பொருளாதாரம்
போன்றவற்றுக்கு தீங்கு செய்யும் ஒன்றாகும். இதன் அதிகரிப்பு ஏனைய பல குற்றச்
செயல்களுக்கும் சமூக பிறழ்விற்கும் குடும்ப சிதைவிற்கும் வழிகோலவல்லது.
ஒற்றுமையான, ஒழுங்கமைக்கப்பட்ட குடும்பத்தை கட்டமைப்பதில் இஸ்லாம்
பெரிதும் கரிசணைக் கெண்டுள்ளது. இந்தவகையில் இஸ்லாம் ஏற்படுத்த விளையும்
அமைதியான குடும்பச் சூழலை போதைப் பாவனை வெகுவாக சீர்குலைக்கிறது.
ஒப்பீட்டளவில் அதிகளவான போதைப் பாவனையாளர்கள் ஒரு நாட்டின்
தலைநகரிலே காணப்படுகின்றனர். இலங்கைத் தலைநகர்; கொழும்பு பிரதேசம்
இதற்கு ஒரு எடுத்துக்காட்டாகக் கொள்ள முடியும். இந்நிலையில் இக்கட்டுரை
கொழும்பு வாழ் முஸ்லிம் குடும்பங்களில் அமைதியான குடும்ப சூழலினை
சீர்குலைக்கும் போதைப் பாவனை பற்றி பரிசீலனைக்கு உற்படுத்துகின்றது.
அடிப்படையில் பண்பு ரீதியிலான ஆய்வு முறையினை பயன்படுத்தும் இவ்வாய்வு
குறித்த பிரதேச முஸ்லிம் பெண்களிடம் பெறப்பட்ட நேர்காணலின் பகுப்பாய்வினை
பிரதான ஆதாரமாகக் கொண்டுள்ளது. அதன் முடிவிற்கு அமைய பஸ்ஹ்
விவாகரத்துக்கு விண்ணப்பித்த, அதன் மூலம் விவாகரத்து பெற்ற கணிசமான
குடும்பங்களிலுள்ள ஆண்கள்; போதை பாவனையைக் கொண்டவர்கள் என அறிய
முடிகின்றது. இந்த வகையில் மதுபானம், கஞ்சா, ஹஷிஸ், கசிப்பு, ஐஸ் மற்றும்
ஹெரோஹின் போன்ற அல்கஹேல் பாவனையும் பான்பராக், மாவா, வெற்றிலை
போன்ற புகையிலைப் (வுழடியஉஉழ) பாவனையும் இவர்களிடையே காணப்படுகின்றது.
இந்த முஸ்லிம் குடும்பங்களில் அமைதியான குடும்பச் சூழலை
கட்டியெழுப்புவதற்கு தேவையான இஸ்லாத்தின் ஏற்பாடுகள் செயலிழந்து
போவத்தக்கதாக இப்போதைப் பாவனை அமைந்து விடவல்லதாக உள்ளது.
இந்தவகையில் குடும்ப உறுப்பினர்களிடையே உறவுகள் தொடர்பான இஸ்லாத்தின்
போதனைகள் நடைமுறைப்படுத்தப்படுவது சாத்தியமற்று போகிறது. குடும்ப
அங்கத்தவர்கள் மீதான ஒரு குடும்பத் தலைவனின் கடமைகள் பாழாகிவிடுகின்றன.
விளைவாக குடும்ப பிணக்குகள் ஏற்பட்டு வன்முறைகளாக வடிவம் பெறுவதே
குடும்ப சிதைவிற்கான சந்தர்ப்பத்தை வலுப்படுத்தியுள்ளது. முஸ்லிம்
குடும்பங்களின் மேம்பாடு, போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்விற்கு
இவ்வாய்வு அடிப்படைத் தகவல்களை வழங்கவல்லது.