dc.description.abstract |
ஊழலானது பொருளாதாரத்திற்குத் தடையாக அமையும் ஒரு காரணியாகும்.
எனவேதான் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இதனது தாக்கம் குறித்து
பரிசீலிக்கப்பட வேண்டியது அவசியமாகும். அந்தவகையில் இவ் ஆய்வின் பிரதான
நோக்கமாக நிலையான விலைகளினாலான மொத்த உள்நாட்டு உற்பத்தியில்
ஊழலின் தாக்கத்தினை கண்டறிதல் என்பது காணப்படுவதோடு, துணை
நோக்கங்களாவன, நிலையான விலைகளினாலான மொத்த உள்நாட்டு
உற்பத்தியினை தீர்மானிக்கும் ஏனைய பேரினப் பொருளாதார காரணிகள் மற்றும்
அவற்றுக்கிடையிலான நீண்டகால மற்றும் காரண காரியத் தொடர்பு ஆகியவற்றைக்
கண்டறிதலாகும். மத்திய வங்கி, உலக வங்கி, Transparency International
ஆகிய வலைத்தளங்களில் இருந்து 2002 – 2018 வரையான வருடாந்த தரவுகள்
பெறப்பட்டு அவை ஆய்வில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ் ஆய்வில் நிலையான
விலைகளின் அடிப்படையிலான மொத்த உள்நாட்டு உற்பத்தி; சார்ந்த மாறியாகவும்,
ஊழல் தரச் சுட்டெண், சனத்தொகைப் பருமன் மற்றும் மொத்த மூலதன
உருவாக்கம் ஆகியவற்றை சாரா மாறியாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆய்வில்
உள்ளடக்கப்பட்ட மாறிகளுக்கான நிலைத்த தன்மைச் சோதனையின் Augmented
Dicky Fuller முடிவுகளின் படி அனைத்து மாறிகளும் மடக்கை முதலாம்
வித்தியாசத்தில் நிலைத்த தன்மைச் செயன்முறையினைப் பின்பற்றுவனவாகக்
காணப்படுகின்றன. பன்மடங்கு பிற்செலவுப் பகுப்பாய்வு மூலம் நீண்டகால
கூட்டொருங்கிணைவுத் தொடர்பானது ஆராயப்பட்டுள்ளது. கிரேஞ்சர் காரண
காரியச் சோதனையின் அடிப்படையில் மாறிகளுக்கு இடையிலான காரண காரியத்
தொடர்பானது ஆராயப்பட்டுள்ளது. பகுப்பாய்வு மென்பொருட்களாக Excel, E-Views
10 ஆகிய மென்பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆய்வின் முடிவுகளின் படி
நீண்ட காலத்தில் 10 வீத பொருண்மை மட்டத்தில் ஊழல் தரச் சுட்டெண்ணும், 1
வீத பொருண்மை மட்டத்தில் சனத்தொகைப் பருமன் மற்றும் மொத்த மூலதன
உருவாக்கம் ஆகியவை நேர்க்கணிய ரீதியில் புள்ளிவிபர ரீதியாக பொருளுள்ள
வகையில் தாக்கம் செலுத்துகின்றது எனக் கண்டறியப்பட்டுள்ளது. காரண காரியச்
சோதனைப் பெறுபேறுகளின் முடிவுகளின் படி, நிலையான விலைகளில் இருந்தான
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இருந்து 1 , 5 வீத பொருண்மை மட்டத்தில்
முறையே ஊழல் தரச் சுட்டெண், சனத்தொகைப் பருமன் ஆகியவற்றுக்கு ஒரு
வழிக் காரண காரியத் தொடர்பானது காணப்படுகின்றது என அறியப்பட்டுள்ளது.
எனவே ஊழல், சனத்தொகைப் பருமன் மற்றும் மொத்த மூலதன உருவாக்கம்
ஆகியவற்றின் மூலம் மொத்த உள்நாட்டு உற்பத்தி சார்ந்த கொள்கைத்
தீர்மானங்களை மேற்கொள்ள கொள்கை வகுப்பாளர்கள் அக்கறை செலுத்த
வேண்டும் எனவும், எதிர்கால ஆய்வுக்காக சில விடயங்களும்
பரிந்துரைக்கப்பட்டுள்ளன. |
en_US |