Abstract:
இவ் ஆய்வானது கல்முனை கடற்றொழில் மாவட்டத்தின் கரைவலை மீன்பிடித்தொழில்
பற்றிய ஆய்வு எனும் தலைப்பினைக் கொண்டதாக விளங்குகின்றது. ஆய்வுப்
பிரதேசத்தின் கரையோரம் பல்வேறுபட்ட சிறப்பம்சங்களைக் கொண்டதாக
காணப்படுகின்றது. இலங்கையின் தென்கிழக்கு கரையோரத்தில் அமைந்துள்ள
கல்முனை கடற்றொழில் மாவட்டத்தின் கரையோரங்களில் வாழ்கின்ற மக்களுடைய
முக்கிய பொருளாதார நடவடிக்கைகளில் ஒன்றான கரையோர மீன்பிடித் தொழிலில்
கரைவலை மீன்பிடித்தொழில் முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குகின்றது. 115.8 முஅ
நீளமான கரையோரத்தைக் கொண்ட இப்பிரதேசம் 12 மீன்பிடி பரிசோதகர்
பிரிவுகளைக் கொண்டுள்ளது. 2016ம் ஆண்டின் கல்முனை கடற்றொழில் நீரியல் வள
திணைக்களத்தின் கணிப்பீட்டின் படி மொத்த மீனவர் சனத்தொகை 78993 பேர் ஆகும்
இது இம்மாவட்ட மொத்த சனத்தொகையில 11.43 சத வீதமாகும். இலங்கையின்
கரையோர மீன் உற்பத்தியில் இப்பிரதேசம் 6 தொடக்கம் 7 சதவீத பங்களிப்பை
வழங்கி வருகின்றது. இப்பிரதேச கரைவலை மீன்பிடித் தொழிலானது சுதந்திரத்திற்கு
பிற்பட்ட காலத்திலிருந்து வளர்ச்சியடைந்து வந்த போதிலும் 1983 ஆண்டின் பின்னர்
நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக தேசிய பாதுகாப்புக் கருதி
இத்துறைசார்ந்து அரசு விதித்திருந்த பல்வேறு கட்டுப்பாடுகள் இத்துறையின்
வளர்ச்சியைப் பாதித்திருந்தது. மூன்று தசாப்தங்களாக கரைவலை மீன்பிடி
தொடர்பான பல்வேறு பிரச்சனைகளை எதிர்நோக்கிய போதிலும் 2009 ம் ஆண்டின்
பின்னர் இயல்புநிலை திரும்பியதன் காரணமாக இத்தொழில் படிப்படியாக
வளர்ச்சியடையலாயிற்று. கரையோர மீன்பிடி தொடர்பான ஆய்வுகள் இப்பிரதேசத்தில்
இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. இவ் ஆய்வானது இப்பிரதேசத்தின் கரைவலை
மீன்பிடி தொழிலுக்கான சாதகமான புவியியல் பின்னணிகள், வாய்ப்புக்கள், வருமான
செலவு விபரங்கள் மற்றும் மீனவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் போன்ற
விடயங்களை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. இவ் ஆய்வினை மேற்கொள்வதற்கு
முதலாம் நிலைத் தரவுகளான வினாக்கொத்து முறை, நேர்காணல், நேரடி அவதானம்
போன்ற முறைகளும் இரண்டாம் நிலைத் தரவுகளாக இத்துறையுடன் தொடர்பான
நிறுவனங்கள், திணைக்களங்களில் உள்ள அறிக்கைகள், இவ்விடயம் தொடர்பான
ஆராய்ச்சி கட்டுரைகள், புள்ளிவிபரத் திரட்டுக்கள் என்பனவற்றின் மூலம் பெறப்பட்டு,
பயன்படுத்தப்பட்டு பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அத்துடன் பண்பு சார் மற்றும்
அளவு சார் முறையில் ஆய்வு செய்வதற்காக, சமூக விஞ்ஞானத்திற்கான புள்ளிவிபரத்
தொகுப்பு (SPSS), (Excel) போன்ற மென்பொருட்களும் பயன்படுத்தப்பட்டு
பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இவ் ஆய்வின் முடிவாக கரைவலை
மீன்பிடித்தொழிலின் சாதக பாதக தன்மை சுட்டிக்காட்டப்பட்டதோடு இத் தொழில்
முறையினை மேற்கொள்வதில் இப்பிரதேசத்தின் முக்கியமான பிரச்சினைகளான
கரையோர அரிப்பு, கரைவலைப் பாடுகள், சந்தைப்படுத்தல் மற்றும் தொழிற்பயிற்சி
இன்மை போன்ற பிரச்சினைகள் இனங்காணப்பட்டு பொருத்தமான பரிந்துரைகளும்
முன்வைக்கப்பட்டுள்ளன.