Abstract:
உலக வாழ்விற்குரிய நல்லறங்களைப் போதிப்பதில் இலக்கியங்களும், மதங்களும் பிரதான இடத்தை
வகிக்கின்றன. பௌத்தமதப் போதனை நூலான மணிமேகலையும், முஸ்லிம்களினால் பின்பற்றப்படும் இஸ்லாமிய
மார்க்கமும் இவற்றுள் உள்ளடங்குகின்றன. இரு வேறுப்பட்ட படைப்புக்களை ஒப்புநோக்கி ஆராய்வது
ஒப்பிலக்கிய ஆய்வாகும். இவ்வொப்பியலாய்வின் அடிப்படையில் பௌத்தம் கூறுகின்ற விருந்தோம்பல்
அறத்தினையும், இஸ்லாம் வலியுறுத்தும் விருந்தோம்பல் அறத்தினையும் ஆராய்வதை இவ்வாய்வு நோக்காகக்
கொண்டுள்ளது. பசி என்பது ஜீவராசிகளுக்குக், குறிப்பாக மானிடர்களுக்கு இயற்கை. அது தீர்க்கப்பட வேண்டும்.
பசித்தோர்க்கு விருந்தோம்ப வேண்டும். இதுவே உயர் அறமாகும். இவ்வாறு மணிமேகலையூடாகப் பௌத்தம்
வலியுறுத்தும் விருந்தோம்பல் கருத்துக்களை இறைவேதமாகிய குர்ஆனும், இறைத்தூதரின் வாழ்வியல்
வடிவமாகிய ஹதிசும் எவ்வாறு வலியுறுத்துகின்றன என்பதனை அறிய, விபரணப்பகுப்பாய்வு முறை, ஒப்பியல்
முறை ஆகிய அணுகுமுறைகளைப் பயன்படுத்தி இவ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலக்கியமான
மணிமேகலையும், மார்க்கமாகிய இஸ்லாமும் இல்வாழ்விற்குரிய விருந்தோம்பல் அறத்தினைப் போதிப்பதுடன்
உலக சமாதானத்திற்கும் வழிவகை செய்கின்றது. இவ்வாய்விற்கு மணிமேகலை, அல்குர்ஆன், ஹதீஸ்
போன்றவற்றுடன் கட்டுரை நூல்கள், இதழ்கள், மின்னூடகக் கருத்துக்கள் போன்றவையும் ஆய்வு மூலங்களாகப்
பயன்படுத்தப்பட்டுள்ளன.