Abstract:
ஒரு பெண் தனது வயிற்றில் சிசுவை சுமக்கின்ற காலப்பிரிவு கர்ப்பகாலம்
எனக்கொள்ளப்படுகின்றதுடன் இக்காலப்பகுதியில் பெற்றோர்கள் மிக அவதானமாக நடந்து
கொள்ளவேண்டியது அவசியமென அறிஞர்கள் விளக்குகின்றனர். தாய்மார்களது உடலும்,
உள்ளமும் ஆரோக்கியமாக இருக்கவேண்டிய காலப்பிரிவாகவும் இது காணப்படுகிறது.
இக்கட்டத்தில் ஒரு தாய் கவனயீனமாக செயற்படுவாளாயின் அவளது எதிர்கால
குழந்தையிலும் இதனது தாக்கம் இடம்பெறுவதற்கு அதிக வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.
இதனடிப்படையில் இஸ்லாம் குழந்தை வளர்ப்பிற்கான முழுமையான வழிகாட்டல்களை
வழங்கியிருப்பதுடன் அவற்றை பெற்றோர்கள் தனது வாழ்வில் கடைபிடிக்க வேண்டும் எனவும்
இயம்புகின்றது. இதன் நிமித்தம் இஸ்லாமிய குழந்தை வளர்ப்பில் பெற்றோர்களின் கர்ப்பகால
நடைமுறை: தோப்பூர் பிரதேசத்தை மையப்படுத்திய ஆய்வு எனும் தலைப்பில் முஸ்லிம்
தாய்மார்களின் கர்ப்பகால நடைமுறைகள் இஸ்லாமிய வழிகாட்டல்களின் அடிப்படையில்
அமையப் பெற்றுள்ளனவா? என்பதனைக் கண்டறிதல் மற்றும் இவர்கள் கர்ப்பகாலங்களில்
எதிர்நோக்கும் சவால்களை இணங்காணல் போன்ற நோக்கங்களைக் கொண்டதாக
இவ்வாய்வு அமையப் பெற்றுள்ளதுடன் இந்நோக்கத்தை அடையும் வகையில் இஸ்லாத்தின்
மூலாதாரங்களான அல்குர்ஆன், ஹதீஸ், தற்கால முஸ்லிம் சிந்தனையாளர்களின்
எழுத்துக்கள், நூல்கள், கட்டமைக்கப்பட்ட வினாக்கள் அடங்கிய 200 வினாக்கொத்துக்கள்
ஆய்வுப்பிரதேசத்தில் தரவுகள் பெறப்பட்டு மீளாய்வுக்குட்படுத்தப்பட்டதுடன் அளவுசார்
ஆய்வாகவும் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாய்வு முடிவுகளின்படி ஆய்வுப்
பிரதேசத்தின் கர்ப்பகால குழந்தை வளர்ப்பு நடைமுறைகளில் அதிகபடியான செல்வாக்கைச்
செலுத்தும் காரணியாக பெற்றோர்களினது கல்வித் தகைமை காணப்படுவதுடன்
முழுமையான இஸ்லாமிய கர்ப்பகால நடைமுறைகளை பின்பற்றியவர்களாக முறைசார்
கல்வியைக் கற்றவர்கள் காணப்படுகிறார்கள். மேலும் ஏனையவர்கள் முழுமையானளவில்
இஸ்லாமிய கர்ப்பகால நடைமுறைகளை பின்பற்றவில்லை என்பதும்
கண்டறியப்பட்டுள்ளதுடன் மேலும் கணவன் மனைவிக்கிடையில் முரண்பாடு, குடும்ப
வன்முறை, தகாத வார்த்தைப் பிரயோகங்கள், மனஅழுத்தம், அதிக கவலை தரக்கூடிய
நிகழ்வுகள், கணவனை நீண்டநாள் பிரிந்து இருத்தல் போன்ற விடயங்களும் கர்ப்ப
காலங்களில் உளரீதியான அழுத்தங்கள் என்பன தாய்மார்களிடம் முழுமையான அளவில்
இடம்பெறுவதற்கு காரணமாக உள்ளன என்ற விடயம் இவ்வாய்வு பிரதேச கர்ப்பிணித்
தாய்மார்கள் எதிர்கொண்டுள்ள சவாலாக இனங்காணப்பட்டுள்ளது. இவற்றிலிருந்து விடுபட
தாய்மார்கள் இஸ்லாமிய தூய வழிகாட்டல்களை பின்பற்றுவதன் மூலமும் கர்ப்ப காலம மற்றும் ஏனைய காலங்களில் இவற்றை நடைமுறைப் படுத்துவதன் மூலமும் சிறந்த ஆளுமை
மிக்க ஸாலிஹான குழந்தைகளை இவ்வுலகிற்கு சமர்ப்பிக்க முடியும் என்பதும் இவ்வாய்வின்
பரிந்துரையாகும்.